குறுந்தொகை


lxxxix


‘ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்’லையாதலால் அவ்விரண்டுக்கும் ஓரளவு பொருள் வேண்டும்; அதனை எத்தகைய இடருற்றாலும் அவன் பொருட்படுத்தாமல் நாடிடையிட்டும் காடிடையிட்டும் சென்று தேடி வந்தான். மனிதனுடைய ஆசைக்கு அளவில்லை. ஆதலின், தன் ஆசைக்கேற்பப் பொருள்களை நிரப்புதல் இயலாதென்பதை உணர்ந்து (59) வேண்டிய பொருளை அறத்தின் வழியே ஈட்டினான். அவனுடைய மனம் அறிந்து மனைவாழ்க்கை நடத்தும் மனைவியும் பொருளில் கருத்துடையவளானாள். “இவள் வந்தபின் முன் வறிய நிலையில் இருந்த இவ்வீடு விழாவை உடையதாயிற்று” என்று போற்றும் நிலைமையைத் தலைவி அடைந்தாள் என்று ஒரு பாடல் கூறுகின்றது. அவளது நல்லூழின் ஆற்றலால் அந்நிலை அமைந்தது என்பது ஓரளவு உண்மை. ஆயினும் ஒரு குடும்பம் விழாவுடையதாதல் வேண்டுமெனின் நிறை பொருளும் உவகை உள்ளமும் வேண்டும். நிறைபொருள் உண்டாகச் செலவிற் சுருக்கமும் வரவுப் பெருக்கமும் இன்றியமையாதன. தற்கொண்டானது வளத்தக்காளாகிய மனைவி செலவு வகைகளை மட்டுப் படுத்தியும், தான் பிரிவால் துன்புறினும் தலைவனை அறங்கருதிப் பொருளீட்டும் முயற்சியில் ஊக்குவித்துப் பெருநிதி பெற்றுவரச் செய்தும் பொருள் பெருகுதற்குக் காரணமாயினள். யாவரிடத்தும் அன்பு பூண்டொழுகுதலினால் குடியில் உள்ளார் அனைவரும் மனங்கலந்து பழகி அவளுடைய நல்லியல்பில் கட்டுண்டு உவகை உள்ளம் கொண்டனர். இவ்விரண்டு வகை பற்றியும் அவளால் விழாவுண்டாதல் புலப்படும். ஆடவனும் சோம்பியிராது வினை முயற்சியில் ஊக்கம் உடையவனாக இருந்தான்.

  
“வினையே யாடவர்க் குயிரே”     (135) 

என்பது அவன் கருத்து. அவனது நெஞ்சம் பொருளின் கண்ணே பிணிக்கப்படுதலின் பிரிவரிய தன் மனைவியையும் பிரியத் துணிந்தான். தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுதற்குப் பொருள் கருவி என்பதையும், அதனை ஈட்டுதல் உலகத்துப் பண்பு (99) என்பதையும் உணர்ந்து மொழி வேறுபட்ட தேசத்துக்கும் அவன் சென்றான்; இங்ஙனம் வேறு பல இடங்களுக்கும் சென்று தன் முயற்சியில் நலம் அடைந்தான். பொருள் ஈட்டி மீண்டு வருகையில் அவன் உள்ளம் நிறைவடைந்தது. “செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு” அப்பொருளைக் கொண்டு வாழ்ந்தான். அதனை வறிதே செலவிடாமல் தக்கபடி போற்றி வந்தமையின் அது, “கேடில் விழுப்பொருள்” (216)