ஆகியது. பொருள் ஈட்டுதலிலும் அதனால் அறத்தைச் செய்தலிலும் இன்பத்தை அடைதலிலும் அப்பொருளைப் போற்றுதலிலும் அவன் சிறப்பு எய்தினான்.
அக்காலத்தில் ஏழை மக்கள் ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளை விலையாக ஈந்து பண்ட மாற்றை மேற்கொண்டனர். செல்வர்கள் பொற்காசுகளைப் பெட்டிகளில் சேமித்து வைத்தனர். அக் காசு வேப்பம் பழத்தைப் போல உருண்டை வடிவினதாக இருந்தது.
பசுக்களைப் பாதுகாத்து அவற்றால் பெறும் பால், நெய் முதலியவற்றை விற்று அவ்வூதியத்தினால் வாழும் மக்கள் பலர் இருந்தனர். அவர்களுடைய செல்வ நிலை “இத்தனை பசுவை உடைய குடி” என்று குறிப்பிடப்பட்டது. ஒரு வறிய குடியினருடைய வாழ்க்கை “ ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை” என்று சொல்லப்படுகின்றது. பசுக்களைக் கோதனம் என்று வழங்குதல் இங்கே நினைத்தற்குரியது.
இங்ஙனமே நிலங்கள் பலவுடையாரை இத்தனை ஏருடையார் என்பது வழக்கு. ஒருவனை, “ஓரேருழவன்” என்று ஒரு புலவர் குறிக்கின்றார்.
உழவும் வாணிகமும் கைத்தொழிலும் அக் காலத்தில் வாழ்க்கைக்குப் போதியனவாகவும் இன்பத்திற்கு உறுதுணையாகவும் இருந்தன. பல சாதியினரும் மனம் ஒன்றி ஒருவருக்கொருவர் துணைபுரிந்து வாழ்ந்து வந்தனர்.
சாதிகள்
அந்தணர் எழுதாக் கற்பாகிய வேதம் ஓதலைச் செய்து வந்தனர். அவருள் பிரமசாரிகள் பலாச மரத்தின் கோலையும் கமண்டலத்தையும் விரத உணவையும் உடையவராக இருந்தனர். அரசர் நெறி திறம்பாமல் அரசு புரிந்தனர். வாணிகருள் உப்பு வாணிகரும் வளைவிற்பாரும் இந்நூலுள் சொல்லப்படுகின்றனர். இடையர், வலைஞரென்பாரைப் பற்றிய செய்திகள் பல. கொல்லரது உலைக் கல்லும், பொற்கொல்லர் பொன்னை உரைக்கும் கட்டளைக் கல்லும், மிதிதோலும், கரிக்குறடும், பொற்காசில் கம்பியைக் கோர்க்கும் செயலும் புலவர்களால் சொல்லப்படுகின்றன. சிறு பிள்ளைகளுக்குச் சிறு வண்டிகளைத் தச்சர் செய்து தந்தனர். வண்ணாத்தி ஆடையைக் கஞ்சியில் தோய்த்து நீர்த்துறையில் துவைத்தாள். கூத்தர் முழவை ஒலித்தனர். ஆரியக் கூத்தரென்னும் வகையினர் கயிற்றின் மீது ஏறிப் பறை கொட்டி ஆடினர்.