பாணர் யாழ் வாசித்து உபகாரிகளிடம் பொற் பூவைப் பரிசிலாகப் பெற்றனர். சிலர் ஒரு கண்மாக்கிணையை முழக்கினர். மன்றங்களிலும் போர்க் களத்திலும் அவர்கள் காணப்பட்டனர். மீன் பிடித்துத் தமக்குரிய மண்டை என்னும் பாத்திரத்தில் சொரிந்து வைத்தனர். தலைவனிடம் இருந்து தலைவிபால் தூதாகச் சென்றனர்.
ஆடவர்
ஆடவர் முயற்சியும், மனவலியும், உடல்உரமும் பொருந்தி விளங்கினர். வீரர்கள் கழலை அணிந்தனர்; சந்தனத்தையும் மலர் மாலைகளையும் அணிந்து உவந்தனர். விழாக்களில் மகளிர் ஆடும் குரவையில் மள்ளர் தலைக்கை தந்தனர்.
மகளிர்
இந்நூலில் சொல்லப்படும் மகளிர் அழகாலும் குணத்தாலும் சிறந்திருந்தனர். நீர் போன்ற சாயலும், மயில் போன்ற இயலும், நறுமை தண்மை மென்மையாகிய இயல்பு வாய்ந்த மேனியும், இயற்கை மணமும், மாமைக்கவினும் உடையவர்களாக விளங்கினர். அவர்கள் மேனி அழகை வெளிப்படுத்திக் கொண்டு தளிர் போன்ற மென்மையையும் பொன் போன்ற பொலிவையும் உடையவர்களாகத் திகழ்ந்தனர்.
கூந்தல் நறுமையும் தண்மையும் உடையது; குழல் முதலிய ஐவகையாகப் பகுக்கப்படுவது; நெறிப்பை உடையது; மை போலக் கரியது; நீட்சியை உடையது; புறத்தே தாழ்ந்து மயிற் கலாவத்தை ஒப்பது; பின்னலோடு கூடியிருப்பது; இத்தகைய கூந்தலிலே பலவகை மலர்களை மகளிர் அணிந்து மகிழ்கின்றனர்.
அவர்களுடைய நுதல் மலர் மணம் வீசுகின்றது; எண்ணாட்டிங்களைப் போலத் தோன்றுகின்றது. தோள் பருத்து மென்மை உடையதாக இலங்குகின்றது; அதற்குப் புணையும் மூங்கிலும் அணையும் உவமிக்கப்படுகின்றன.
நெய்தல், குவளை, தாமரை என்னும் மலர்களைப் போலவும் மானின் கண்களைப் போலவும் கண்கள் அழகு பெறுகின்றன; கொழுவிய கடையையும் சிவந்த அரிகளையும் குளிர்ச்சியையும் கொண்டு மையணியப் பெற்று எப்பொழுதும் அலமருகின்றன.
பற்கள் செறிவு பெற்றுக் கூரியனவாகவும் தூய வெள்ளியனவாகவும் ஒளியை உடையனவாகவும் நாணன் முளையைப் போன்றனவாகவும் தோன்றுகின்றன. நாக்குச் சிவந்து அப்பற்களுக்கு அஞ்சுவது போலத் திகழ்கின்றது. இடை சிறுத்துக் காணப்படுகின்றது. மார்பில் சுணங்கு படர்கின்றது. மெல்லிய