சீறடியால் மயிலைப் போல மகளிர் நடக்கின்றனர்; குறுக அடியிட்டு அசைந்து நடந்து வருகின்றனர்.
அவர்களுடைய மொழிகள் சிலவாக இருப்பினும் அழகிய பொருள் செறிவும் மென்மையும் இனிமையும் உடையனவாக அமைகின்றன.
மகளிருடைய கூந்தலில் பொன்னரி மாலையும், காதில் குழையும், தோளில் தொடியும், முன் கையில் சங்கு வளையும் பிற வளைகளும், அடியில் சிலம்பும் அணியப்பட்டு அழகு செய்கின்றன. இவற்றை அன்றி, வேறு பல வாலிழைகள் அவர்களுடைய இயற்கை அழகுடைய மேனியில் அமைந்து செயற்கை அழகைச் செய்கின்றன.
பேதை மகளிர் பந்தாடுகின்றனர்; பாவையொடு விளையாடுகின்றனர். கன்னி மகளிர் பிறையைத் தொழுகின்றனர். நீராடுதலிலும், பொழில் விளையாடுதலிலும், அலவனாட்டுதலிலும், கிளி வளர்த்தலிலும் மகளிர்க்கு விருப்பம் மிகுதியாக உள்ளது. மரங்களில் இருந்து பூவைக் கொய்தும், கொய்த பூவைச் செப்புகளில் சேமித்து வைத்தும், தாமே முல்லைக் கொடியை வளர்த்தும் மலரின் பாலுள்ள தம் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர்.
நீராடும் பொழுது சிலர் எண்ணெய் போகக் களிமண்ணை இட்டுப் பிசைந்தும், நீராடிய பின்னர் அகிற் புகையாலும், சந்தனப் புகையாலும் கூந்தலை உலர்த்தியும், எண்ணெய் தடவி வாரிப் பூ அணிந்தும் தம் கூந்தலை அலங்கரிக்கின்றனர்.
மணம் புரிந்த மகளிர் சிலம்புகழி நோன்பு இயற்றுகின்றனர். தலைவரைப் பிரிந்த மகளிர் அவர் விரைவில் வரும் பொருட்டுத் துர்க்கையை வணங்குகின்றனர்; அவர் கூறிச் சென்ற நாட்கணக்கைச் சுவரில் கோடிட்டுப் பார்த்து அறிகின்றனர்.
கருப்ப முதிர்ந்த மகளிர் புளிச் சுவையை மிகுதியாக விரும்புகின்றனர். பன்னிரண்டு மாதம் கருப்ப முதிர்தலை ஒரு புலவர் சொல்லுகின்றார்.
விழாவில் மகளிர் துணங்கைக் கூத்தாடிக் களிக்கின்றனர். உரலில் தானியங்களை இடிக்கும்போது வள்ளைப் பாட்டைப் பாடுகின்றனர்.
அவர்கள் இனிய உணவுகளை அடுவதில் திறமையையும், தலைவர் மனம் கோணாதவாறு ஒழுகும் இயல்பையும், இணையற்ற அன்பையும், தெய்வக் கற்பையும் உடையவராகி வீட்டிற்கும் நாட்டிற்கும் புகழை உண்டாக்குகின்றனர்.