குறுந்தொகை


xciii


நிமித்தங்கள்

     அக் காலத்தார் பார்க்கும் நிமித்த வகைகளில் சிலவற்றை இதில் காணலாம். பாலை நிலத்தில் செல்வார் ஓந்தியை நிமித்தப் பொருளாகக் கொள்வர். நிமித்தம் புள்ளெனக் கூறப்படுகின்றது. முதலில் பறவைகளால் நிமித்தம் பார்க்கும் வழக்கம் உண்டாயினமையின் அப் பறவையைக் குறிக்கும் புள் என்னும் பெயரால் அது வழங்கப் பெற்று, அப்பால் வேறு பலவகை நிமித்தங்களுக்கும் அதுவே பெயராக வழங்கலாயிற்று என்று தோன்றுகின்றது;

  
“... ... ... ஓதி முதுபோத் 
  
 தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும்”     (140) 

என்பதில் இவ்வோந்தி நிமித்தத்தையும் புள் என்றே வழங்குதல் காண்க; பறவைகளால் நிமித்தம் பார்த்தலை,

  
“குருகு மிருவிசும் பிவரும்”     (260) 

என்னும் செய்யுள் பகுதி அறிவிக்கும். காக்கை கரைந்தால் விருந்தினர் வருவார் என்பது நம் நாட்டினர் கொள்கை. ஒரு பெண் புலவர் அங்ஙனம் விருந்து வரக் கரைந்த காக்கையை நன்றி அறிவோடு பாராட்டி இருக்கின்றார். மகளிருக்குத் தோள்வளை செறிதல் ஒரு நன்னிமித்தம். புள், விரிச்சி என இரண்டும் ஒரு பாட்டில் கூறப்படுகின்றது. விரிச்சி என்றது நற்சொல். அதனை இக் காலத்திலும், “அசரீரி வாக்கு” என்று வழங்குவர்.

  
வழக்கங்கள்

    பொதுவாக நாட்டு மக்களிடத்தே காணப்படும் சில வழக்கங்களை இந்நூலால் அறிய இயலும். அவற்றில் சில இக் காலத்தில் காணப்படாதன; சில காணப்படுவன. பறையும், சங்கும், ஆர்ப்ப மணம் புரியும் ஒரு வழக்கம் சொல்லப்படுகின்றது. மணம் செய்த பின்னர் மகளின் சிலம்பைக் கழிக்கும் ஒரு வகையான நோன்பு பண்டைக் காலத்தில் செய்யப்பட்டது. சுடலையைக் கண்டு அகன்று செல்லுதல், கலத்தில் பால் கறத்தல், முன்றிலில் தானியத்தை உலர்த்துதல், முதியோர் சென்று மணம் பேசுதல், உயர்ந்த இடத்தில் ஏறிப் பார்த்தல், பிறையைத் தொழுதல் முதலியன சில வழக்கங்கள். ஒருவருடைய அச்சத்தைப் போக்கும் பொருட்டு அவரது நுதலை நீவுதல் பழைய வழக்கம்.

     துன்புற்றவர்கள் அத்துன்ப உணர்ச்சி தாங்க மாட்டாமல் முட்டிக் கொள்ளுதலும், ஏதேனும் ஒரு காரணத்தை வைத்துக்