குறுந்தொகை


xciv


கொண்டு ஓவெனப் புலம்புதலும், இன்புற்றவர்கள் உவகையினால் கண்ணீர் விடுதலுமாகிய குணத் தன்மைகளைப் புலவர்கள் புலப்படுத்தி இருக்கின்றனர்.

     துயரத்தினால் உண்டாகும் கண்ணீர் வெம்மையை உடையதாகும் என்பதும், உத்தம ஆடவர் மேனி முல்லையின் நறுமணத்தை உடையதாக இருக்கும் என்பதும் அரிய செய்திகள்.

  
கருவிகள்

    நாகரிக வாழ்வையும் கைத்தொழில் சிறப்பையும் புலப்படுத்தும் பலவகையான கருவிகளும் பொருள்களும் இந்நூலில் இடையிடையே சொல்லப்படுகின்றன. வீரர்களுக்கு உரிய படைக் கலங்களும் அவ்வச்சாதியினர்க்குரிய கருவிகளும் முன்னர்ச் சொல்லப்பட்டன. உடை வகைகளில் கலிங்கம் என்பது ஒன்று. குறிஞ்சி நில மகளிர் உடுக்கும் தழை உடை ஒன்று. முருகக் கடவுளுக்குரிய செந்நிற உடுக்கை கடவுள் வாழ்த்தில் சொல்லப்படுகின்றது.

    அரசனுக்குரிய சிங்காதனத்தைக் கட்டில் என்பர். மகளிர் விளையாடுவதற்குப் பந்தும் பாவையும் பயன்பட்டன. பாவைகள் பூந்தாதிதானும் பஞ்சாய்க் கோரையாலும் செய்யப்பட்டன. செல்வர் வீடுகளில் இளமகளிர் பொற் கலத்தே பாலை உண்டனர். மக்கள் கண்ணாடிக் குப்பிகளில் கள்ளை வைத்தனர். குளிர் காலத்தில் உண்ணும் பொருட்டு வெந்நீரை ஆறாமல் பாதுகாத்து வைத்தற்குரிய செப்பொன்று இருந்தது. அது சேமச்செப்பு என்று சொல்லப்படுகின்றது. குறிய கால்களை உடைய கட்டிலும், அதன் மேல் நூலால் தொடுக்கப்பட்ட பூமாலைகள் மலர்கள் அணைகள் என்பவை செறிந்த படுக்கையும் செல்வர் வீடுகளில் அமைந்திருந்தன.

  
ஊர்திகள்

    வாகனங்களுள் உப்பு வாணிகருடைய மூடா வண்டிகள் ஒருசார் காணப்படுகின்றன. வீரரும் பிறரும் ஊரும் தேர்கள் ஒருபால் உள்ளன. வெள்ளிய தந்தத்தால் செய்யப்பட்ட தேர்கள் சிறந்த குதிரைகள் பூட்டப் பெற்று நிற்கின்றன. தேரின் பக்கங்களில் பொன்னால் செய்த தகடுகள் தைக்கப்பட்டும், முன்னே தாமரை மொட்டுப் போன்ற வடிவமுள்ள கொடுஞ்சி அமைக்கப்பட்டும் உள்ளன. வேறு பல வகையான அலங்காரங்களையும் இழைகளையும் அத்தேரில் காண்கின்றோம். அதன் சக்கரங்களில் கூடப் பொன்னால் ஆகிய சூட்டு இருக்கின்றது. தேர் வரும்போது அதில் கட்டப் பெற்ற மணிகள் ஒலிக்கின்றன.