நீரில் விளையாடுதற்குரிய புணைகளும், கடலில் செல்லுதற்குரிய திமிலும், கலமும் (கப்பலும்) சொல்லப்படுகின்றன. ஒரு மலை மாலைப் பொழுதில் இருளில் மறைவதற்கு உவமையாகக் கப்பல் கடலில் ஆழ்வதை ஒரு புலவர் கூறுதலின் கப்பல் பெரியதாக இருக்க வேண்டும் என்று தெரிய வருகின்றது.
உணவு வகை
தேவர்களுடைய உணவாகிய அமிழ்தமே யாவற்றினும் சிறந்தது என்ற நினைவு அக் காலத்தும் இருந்தது. அதனை அரும் பெறலமிழ்தம் என்று குறிக்கின்றனர். வயிறாரச் சுவைத்து உண்ணும் உணவை ஆர்பதம் என்றும், வைத்திருந்து விலங்குகள் உண்ணும் உணவை அல்கிரை எனவும், காக்கைக்கு இடுவதைப் பலி எனவும், கடவுளுக்கு நிவேதிப்பதை மடை எனவும் கூறுவர். பாலும் நெய்யும் கலந்த உணவுகள் பல சொல்லப்படுகின்றன. கதிரில் உள்ள பச்சை நெல்லைக் கொண்டு இடிக்கும் பாசவலும், நெற் பொரியும், வெல்லக் கட்டியும் சிலவகையான உணவுகள். தயிரைப் பிசைந்து தாளித்துச் செய்யும் ஒருவகைக் குழம்பை, “தீம்புளிப் பாகர்” என்று குறிக்கின்றனர். பொரியோடு கலந்து பாலை இளைஞர் உண்டல் வழக்கம் (356). உண்பாரது தகுதிக்கேற்ற உணவுகள் புலவர்களால் கூறப்படுகின்றன. காக்கைக்கு வெண்ணெற் சோறும் நெய்யும் இடுவதும், அறிவருக்குச் செந்நெற் சோறும் நெய்யும் இடுவதும் இதனை வெளிப்படுத்தும்; பாணனுக்குரிய உணவாக நெய்யில் பொரித்த குறும்பூழ்ப் பறவையாகிய வியஞ்சனம் சொல்லப்படுதலும் காண்க.
உணவிற்குரிய பொருள்களாகிய நெல், வரகு, தினை, மொச்சை, கள் என்பவற்றைப் பற்றிய செய்திகள் பல. கள் என்பதை மயக்கத்தைத் தரும் தென்னங்கள் என்றே கொள்ளுதல் தக்கதன்று. அரசர்களும் வேறு சிறந்த வாழ்க்கை நிலையை உடைய மக்களும் இதனை நுகர்வாரென்பதை ஆராய்கையில் அவர்களுக்கு மன எழுச்சியைக் கொடுக்கும் பான வகை என்றே கொள்ளுதல் வேண்டும்.
கள்ளில் நெல்லால் செய்த கள்ளும், பனங்கள்ளும், இனிமையும் வெப்பமும் உடைய கள்ளும், தேனால் ஆகிய ஒரு வகைக் கள்ளும் மக்களுக்கு உணவாகச் சொல்லப்படுகின்றன. அதனைக் கண்ணாடிக் குப்பிகளில் சேமித்து வைப்பர்; அவற்றின் வாய் குறுகியும் ஏனைப் பகுதி அகன்றும் இருக்கும்;
| “மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன |
| இட்டுவாய்ச் சுனைய” |
என்னும் அடிகள் இச்செய்திகளை அறிதற்குக் கருவியாக உள்ளன.