குறுந்தொகை


xcvi


உரை

     மனிதன் பெற்ற பேறுகளில் பேசும் ஆற்றல் ஒன்று. விலங்குகள் உண்ணுதற்குரிய வாய் பெற்றும், பேசுதற்குரிய ஆற்றலின்மையின் வாயில்லாப் பிராணிகள் ஆகின்றன. மனிதன் தனக்கு அரிதில் கிடைத்துள்ள வாயால் பேசும் உரைகள் இன்ன தன்மையினவாதல் வேண்டும் என்பதைப் பற்றிய புலவர்களுடைய எண்ணங்களை இந்நூலில் இருந்து ஒருவாறு அறியலாகும். அவற்றை அவர்கள் தனியாக எடுத்துக் கூறவில்லை. ஆயினும,் தலைவன் தலைவி முதலியோருடைய இயல்புகளோடு சார்த்திச் சொல்லும் இடங்களில் உள்ளவற்றை நாம் தனியே எடுத்து ஆராய்ந்து பார்ப்பின் சொல்லைப் பற்றிய அவர்கள் எண்ணங்கள் புலப்படும்.

    பொய்ம்மொழி புகலுதல் அறவே ஒழிக்கத் தக்கது என்பது அவர்களுடைய முதல் கொள்கை. ஒருவர்பாலுள்ள விருப்பத்தால் உள்ளதை மறைத்துக் கூறுதலை அவர்கள் வெறுத்தனர். அறிந்த செய்தியைப் பொய்த்துக் கூறுதல் ஆன்றோர்கள்பால் இல்லை. அங்ஙனம் தீது மொழிந்தார் தக்காராகார். உண்மையைப் போலத் தோற்றும்படி பொய்யைச் சொல்லுதல் பிழை;

  
“வாய்போற் பொய்ம்மொழி கூறலஃ தெவனோ”     (259) 

என்பது காண்க. நன்மையைத் தருவதாகிய உண்மையைக் கூறுதற்குச் சிறிதும் அஞ்சார்;

  
“நன்மொழிக் கச்ச மில்லை”     (392) 

என்பதே அவர்கள் கருத்து. பயனுடைய மொழியை நல்லுரையாகவும், பயனற்ற மொழியைப் புல்லுரையாகவும் கருதினர். இனிமையோடு பேசுதலையே அவர்கள் விரும்பினர். இன்னாக் கிளவியை அகற்றினர். பிறரைப் பழித்தலையும் வெறுத்தனர். பொய், பயனில் சொல், இன்னாச்சொல், புறங்கூறல் என்பவற்றை உரையின் குற்றங்கள் என்று திருவள்ளுவர் வகுத்துக் காட்டிய நெறியையே இந்நூல் செய்யுள்களிலும் காண்கின்றோம்.

    பேசும்பொழுது ஆராய்ந்து பேசுதலே சிறந்தது; “தெரிதீங்கிளவி” என்னும் தொடர் இதனைக் குறிக்கின்றது. நெஞ்சில் நன்மையையே நினைத்துப் பேச வேண்டும்; “தீதி னெஞ்சத்துக் கிளவி” என்பது இக் கருத்தைத் தோற்றுவிக்கின்றது. அழகிய சொற்களால் இனிமை தோன்றப் பேச வேண்டும். “அந்தீங்கிளவி” என்னும் தொடரால் இதனைப் பெறலாகும். மெல்லென இனிமை பெறக் கேட்பார் விரும்பும் வண்ணம் பேசும் உரைகளை,

  
“மெல்லிய வினிய மேவரு தகுந”