என ஒரு புலவர் குறிக்கின்றார். இவற்றால் வஞ்சகம் இல்லாத நெஞ்சத்தோடு எண்ணி ஆராய்ந்து அழகிய சொற்களால் இனிமையும் நன்மையும் உண்டாகும் வண்ணம் உண்மையும் பயனும் உடைய சொற்களைப் பிறர் விரும்பிக் கேட்கும் முறையில் பேசும் மொழிகளே சிறந்தவை என்று பழம் புலவர்கள் எண்ணிய எண்ணம் புலப்படுகின்றதன்றோ?
இசை
தமிழர் இசையைப் போற்றி வளர்த்து வந்தனர். இசைப் பயிற்சியையே தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட பாணர் முதலியோர் தமிழ் மக்களுக்குத் தம்முடைய இசையினால் இன்பம் ஊட்டினர். இசையைப் பற்றியும், இசைக் கருவிகளைப் பற்றியும் சில செய்திகள் இந்நூலில் உள்ளன.
தோல் கருவிகளில் தண்ணுமை, தொண்டகம், பதலை, முரசு, முழவு என்பன இதில் வந்துள்ளன. இவற்றுள் தொண்டகப் பறை குறிஞ்சி நிலத்தாருக்குரியது (375). துளைக் கருவியுள் குழலின் இசை வங்கா என்னும் பறவையின் ஒலிக்கு உவமை ஆகின்றது. பண்களுள் படுமலைப் பாலையின் உச்ச விசையும் நெய்தற்குரிய விளரிப் பண்ணும் உவமைகளாக ஆளப்படுகின்றன. பாட்டுக்களுள் குன்றம் பாடும் பாட்டும் உலக்கைப் பாட்டாகிய வள்ளையும் மகளிரால் பாடப்படுவனவாகும்.
கடவுள்
இவ்வாறு நாகரிகம் மிக்க வாழ்க்கை நடத்திய தமிழ் நாட்டினர் கடவுளை வணங்கி வழிபட்ட முறைகள் பலவகைப்படும். முருகக் கடவுளைக் குறிஞ்சி நில மக்கள் வெறியாட்டெடுத்து வழிபடுவர். இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்தாக அமைந்த செய்யுள் முருகக் கடவுளைப் பற்றிக் கூறுவது. அவர் தாமரை போன்ற திருவடிகளையும், பவழம் போன்ற மேனியையும், திகழும் ஒளியையும், குன்றிமணி போன்ற செந்நிற உடையையும், சுடர் எறிக்கும் நெடிய வேலாகிய படையையும், அம்பையும், கழலும் தொடியையும், சேவல் கொடியையும் உடையவர். உலகத்தைத் துன்பத்தில் இருந்து காத்து இன்பத்தை உண்டாக்குபவர். அவருக்கு யானை வாகனம் உண்டு. குன்றின் நெஞ்சுபக வேல் எறிந்த வீரமும் அவுணரை அழித்த புகழும் உடையவர். அவரைச் சேய், நெடுவேள், முருகு என வழங்குகின்றனர். குறிஞ்சி நிலத்தார் கடம்ப மரத்தில் அவர் உறைவதாகக் கருதி அதனைப் பூசிப்பர். அரலை மாலை சூட்டியும், தினைக் கதிரையும் தினையையும் வைத்தும், மறிப்பலி கொடுத்தும் முருக வேளை வழிபடுவர்.