மலையில் உள்ள சில தெய்வங்களைச் சூரரென்பர். அவர்களுள் பெண் தெய்வங்களைச் சூரர மகளிர் என்பர். அத்தெய்வத்தால் பற்றப்படுதலும், அங்ஙனம் பற்றப்பட்டார் நடுங்குதலும் இயல்பு.
கடவுள் கொடியோரைத் தண்டிக்கும் என்னும் கொள்கை உடையவராகிய மக்கள் அக்கடவுளுக்கு அஞ்சி அறநெறியில் ஒழுகினர்.
சூலத்தை உடைய துர்க்கையை வழிபட்டுக் காப்பு நூல் கட்டி விரதம் இருத்தல் மகளிர் வழக்கம். பேய்களைப் பற்றிய செய்திகள் சில வருகின்றன.
கூற்றுவனைப் பற்றிய செய்தி ஒன்று உள்ளது. அவன் இரக்கம் இன்றி உயிரைக் கொண்டு செல்லுதலின் அவனது செயலை, “அறனில் கோள்” என்று ஒரு புலவர் சொல்கின்றார்.
மக்கள் தம்முடைய புண்ணியச் செயலால் தேவர்களாகி அவர்களுக்குரிய போகங்களை நுகர்வர் என்ற கொள்கை அக் காலத்திலும் இருந்தது. நன்றி செய்தாரை, “இவர்கள் அமிர்தம் உணவாகப் பெற்றுத் தேவலோக வாழ்க்கையைப் பெறுவாராக” என்று வாழ்த்துவார் கூற்றுக்களால் இதனை அறியலாம். தேவலோகம் புத்தேணாடென்றும், உயர்நிலை உலகம் என்றும், பெரும் பெயர் உலகம் என்றும் சொல்லப்படும். புண்ணியம் செய்தார் சுவர்க்கப் பதவியுறுதல் குறிக்கப்படுதல் போலவே பாவம் செய்தார் நிரயம் புகுதலும் குறிக்கப்படுகின்றது. வாழ்த்துவார் கூற்றினால் முன்னது வெளிப்படுதலைப் போல, வைவார் கூற்றினால் பின்னது தெளிவாகின்றது (292).
நீதிகள்
அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய நீதிகள் அங்கங்கே அமைந்து விளங்குகின்றன. பெரிய உபகாரம் செய்தால் அவரை யாவரும் விரும்புவர் என்பது,
| “பெருநன் றாற்றிற் பேணாரு முளரோ” (115) |
என்பதனாலும் அறத்தால் புகழ் பெறவிரும்புவார் பொருளைச் சேமித்து வையாமல்ஈவாரென்னும் கருத்து,
| | “நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற் | | கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத் | | தங்குதற் குரிய தன்று” (143 | |
என்பதனாலும் சான்றோர் அறநெறியே செல்வரென்பது,
| “திறவோர் செய்வினை யறவ தாகும்” (247) |
என்பதனாலும்