நால்வகைச் சொற்கள்
சில முறைப் பெயர்கள் இடத்திற்கேற்ற மரபை உடையன. யா என்பது தன்மையிடத்துக்கும் ஞா என்பது முன்னிலைக்கும் தொடர்பு உடைய முறைப் பெயர்கள் என்று தெரிய வருகின்றது (40).
வினையெச்ச உருவங்களில் செய்யிய, செய்யியரென்னும் வாய்ப்பாடுடைய சொற்கள் பல அளபெடையோடு காணப்படுகின்றன. செய்பு, செய்ம்மாரென்னும் வாய்பாட்டெச்சங்களும் வந்துள்ளன. குடி என்னும் வினையடியாகப் பிறந்த செய்யிய என்னும் வாய்பாட்டெச்சம் குடீஇயவென இருத்தல் முறை; இந்நூலில் குடிக்கியவென (356) வந்துள்ளது. அதற்குக் குடித்தியவென ஒரு பாடம் காணப்படுகின்றது.
இசின், சின் என்னும் இரண்டு இடைச்சொற்கள் பல இடங்களில் ஆளப்படுகின்றன. அவற்றுள், இசின் என்பது “வழிபடல் சூழ்ந்திசின்” (11) என்பது போலத் தன்மையிலும், சின் என்பது “உரைத்திசின்” (13) என்பது போல முன்னிலையிலும் பல இடங்களில் அமைந்துள்ளன. அழேனோ என்னும் பொருளில் “அழாற்கோ” (192) என ஓர் அரும்பதம் இந்நூலில் மட்டும் காணப்படுகின்றது.
மோ, மே, தில்ல, மன், மன்ற, அம்ம, தலை, ஆல், ஏ, ஓ முதலிய பலவகையான இடைச் சொற்கள் பொருள் உடையனவாகவும் அசை நிலையாகவும் வழங்குகின்றன. அங்ஙனமே நனி, தவ முதலிய உரிச்சொற்களையும் இதில் காணலாம்.
வடசொற்கள்
வடசொற் கிளவிகள் வடவெழுத்தொருவித் தமிழ் எழுத்தைப் பெற்றும் தமிழுக்கு ஏற்ற விகாரங்களை அடைந்தும் வேறு பல வகையில் திரிந்தும் வழங்குகின்றன. அவை வருமாறு:- அகில், அச்சிரம், அமயம், அமிழ்தம், அரசன், அவை, ஆரியர், இமயம், உலகம், ஏமம், கடிகை, கமண்டலம், கலாவம், காமம, காலம், குணன், குவளை, சகடம், சூலி, சேமம், தண்டு, தாது, தூது, தெய்வம், நகர், நீலம், நேமி, பக்கம், பணிலம், பருவம், பலி, பவழம், பிச்சை, மண்டிலம், மணி, மதம், மதி, மாலை, முகம், முத்து, முரசு, யாமம், வாசம் முதலியன. இவற்றில் சிலவற்றைத் தமிழ் எனவே கொள்வாரும் உளர்.