குறுந்தொகை


ci


உவமை

     வினை, பயன், மெய், உரு என்னும் நால் வகையான உவமைகளும் பல இடங்களில் உள்ளன. உவமையின் நயம், சங்க நூல்களில் போலப் பிற்கால நூல்களில் காணல் இயலாது.

    உவமையும் பொருளும் ஒரே இடத்தில் உள்ளனவாகச் சில உவமங்கள் கூறப்படுகின்றன; பாலை நிலத்தில் உள்ள பல்லியின் ஒலிக்கு அந்நிலத்தில் உள்ள மறவர் அம்பை உகிர் நுதியிற் புரட்டும் ஓசையை உவமை கூறுதலும் (16), அகவன் மகளுடைய நரை மயிருக்கு அவள் அணிந்த மனவுக் கோப்பையே உவமை ஆக்குதலும் (23), மலைமேல் உள்ள இற்றியின் வேருக்கு அங்குள்ள அருவியை உவமையாக அமைத்தலும் (106), ஒரு குற மகளின் கண்ணிற்கு அவளுடைய தமர் எய்த அம்பை உவமித்தலும் (272) இவ்வகையைச் சார்ந்தவை.

    கூற்றுடையார் தாம் அறிந்த உவமையாகக் கூறுதல் இயல்பு; மலையில் வாழும் தோழி தலைவியின் காமத்திற்குப் பலாப் பழத்தையும் (18), குறிஞ்சி நிலத் தலைவி தான் ஆற்றி இருத்தலுக்குக் கிளியுண்ட கூழைத்தினை தழைத்தலையும் (133) உவமையாக இயம்புதல் இத்தகையதே ஆகும்.

    கேட்பார் தெளிவதற்கேற்ற உவமையை கூறுதல் ஒரு வகை. பரத்தையிற் பிரிந்து வந்த மருத நிலத் தலைவனுக்குத் தம் நிலையைப் புலப்படுத்த வந்த தோழி,

  
“கைவினை மாக்கடஞ் செய்வினை முடிமார் 
  
 சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட 
  
 நீடின வரம்பின் வாடிய விடினும் 
  
 கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது 
  
 பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் 
  
 நின்னூர் நெய்த லனையேம் பெரும”     (309) 

என்று கூறுதல் இதற்கேற்ற உதாரணமாதல் காண்க. அன்ன, அனைய, ஆங்கு, இன், இன்ன, ஏய்க்கும், ஒத்து, கடுப்ப, புரையும், போல், மருள், மானும் முதலிய உவம உருபுகள் செய்யுட்களில் வந்துள்ளன.

  
புலவர்கள்

    இந்நூலில் செய்யுட்கள் சிலவற்றில் ஆசிரியர் பெயரே ஏடுகளில் இல்லை. சில ஆசிரியர்கள் பெயர்களில் பல பிரதிபேதங்கள் உள்ளன. சில பெயர்கள் ஒரே புலவர்க்கு உரியனவாகக் கருத இடம் இருப்பினும் துணிந்து சொல்ல முடியவில்லை.