குறுந்தொகை


cii


    ஆயினும் இப்பொழுது கிடைக்கும் பெயர்களைக் கொண்டு புலவர்களைப் பற்றிய சில விஷயங்களை நாம் அறிந்து கொள்ள இயலும். சில புலவர்களுடைய ஊர், சாதி, தொழில், உறுப்புக் குறை முதலிய சிலவற்றை அவர்களுடைய பெயர்களில் இருந்தே ஊகித்து உணர்ந்து கொள்ளலாம். அன்றியும் அக்காலத்தில் மக்களுக்கு இடும் பெயர்களைப் பற்றிய சில செய்திகளையும் தெரிதல் கூடும்.

     இந்நூல் செய்யுட்களில் பொருள்களைச் சிறப்பித்தும் அரிய உவமைகளைக் கூறியும் தம் புலமைத் திறத்தைக் காட்டிய புலவர்கள் சிலருக்கு அவ்வாற்றலைக் குறிக்கும் சிறப்புப் பெயர்கள் அமைந்துள்ளன. அவற்றில் சில சிலருடைய இயற்பெயரோடு இணைந்தும் வேறு சில தனியாகவும் உள்ளன.

  
சிறப்புப் பெயர்கள்

    (1). கார்க்கியர் என்னும் புலவர் பெருமான் நெய்தல் திணையைப் பாடும் ஆற்றல் வாய்ந்தமையின் நெய்தற் கார்க்கியர் என்று வழங்கப்படுகின்றார். அவர் பாட்டுக்களில் (55, 212)நெய்தல் நிலத்தில் கழியிலுள்ள நீலப் பூக்கள் கூம்புவதும், கடற்றி வலை வீச ஊதைக் காற்றுத் துன்பத்தை உண்டாக்குவதும், தலைவன் மணி ஒலிக்கத் தேரில் ஏறிக் கடற்கரை வழியே வருவதும் சொல்லப்படுகின்றது.

    (2). பெருங்கடுங்கோ என்பவர் ஓர் அரசர்; தமிழ்ப் புலமையில் சிறந்தவர். அவர் பாலை நிகழ்ச்சிகளைப் பாடுதலில் வீறு பெற்றவராதலின் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற பெயரால் வழங்கப்படுகின்றார். இந்நூலில் உள்ள அவர் பாடல்களில் பெரும்பாலானவை பாலைக்குரியனவே.

    (3). கோவேங்கைப் பெருங்கதவன் என்பது ஒருவர் பெயர். அவர் செய்யுளில் (14) கல்லின் இடையே முளைத்த வேங்கை மரத்தின் பூவை உடைய கிளையை அருவி தாக்கும் காட்சி வருணிக்கப்படுகின்றது. வேங்கை மரத்தைப் பற்றிய இச்செய்தியை அமைத்தது பற்றி இவர் இயற்பெயரோடு வேங்கை என்னும் அடை இயைக்கப் பெற்றதென்று கருத இடம் உண்டு.

    (4). மாதங்கீரனென்னும் புலவர் மடலேற்றத்தைப் பற்றிய செய்திகளைத் தம் செய்யுளில் சொல்லியதால் (182) மடல் பாடிய மாதங்கீர் என்னும் பெயரோடு குறிக்கப்படுகின்றார்.

    (5). நச்செள்ளையார் என்ற புலவர் காக்கையைப் பற்றிப் பாராட்டிப் பாடினமையால் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்று சிறப்பிக்கப் பெற்றார்.