இந்த ஐந்து புலவர்களுடைய இயற்பெயரும் சிறப்புப் பெயரும் ஒருங்கே அறியப்படுகின்றன.
சிறப்புப் பெயர் மாத்திரம் தெரியும் புலவர்கள் :-
(1).கயமனார்: பசிய இலையினின்றும் மேலெழுந்த நெய்தல் பூ கழியில் வெள்ளம் மிகும் போதெல்லாம் கயத்தின்கண்ணே மூழ்கும் மகளிருடைய கண்ணை ஒக்குமென்று இவர் ஒரு செய்யுளிலே (9) பாடுகின்றார். இது பற்றி இவர் கயமனார் என்ற சிறப்புப் பெயர் பெற்றார் என்று ஊகிக்கப்படுகின்றது.
(2). செம்புலப் பெயனீரார்: நொது மலராக இருந்த தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டு உள்ளப் புணர்ச்சி உற்றதை,
| “செம்புலப் பெயனீர் போல |
| அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே” (40) |
என உவமை வாயிலாக வெளியிட்ட சிறப்புப் பற்றி இவர் இப்பெயர் பெற்றார்.
(3). அணிலாடு முன்றிலார்: தலைவன் பிரிந்த காலத்தில் பொலிவு இழந்த தலைவிக்கு மக்கள் போகிய அணிலாடு முன்றிலை உடைய இல்லத்தை உவமை ஆக்குதலின் (41) இவர் பெயர் இங்ஙனம் அமைந்தது.
(4). நெடுவெண்ணிலவினார்: களவுக் காலத்தில் இரவுக் குறிக்கண் வரும் தலைவனுக்கு இடையூறாக இருக்கும் நிலவை, “நெடுவெண்ணிலவே” என்று விளித்துத் தோழி வெறுப்புக் குறிப்புப்படக் கூறுவதாக ஒரு செய்யுள் (47) பாடியதால் இவர் இப்பெயரைப் பெற்றார்.
(5). மீனெறி தூண்டிலார்: கானயானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலைப் போல மேலே எழும்புமென உவமை கூறிய திறம் பற்றி (54) இவர் இப்பெயரை அடைந்தார்.
(6). விட்ட குதிரையார்: யானையால் பற்றி விடப்பட்ட மூங்கில் செருவில் செலுத்தி விட்ட குதிரையைப் போல மேலே எழும்புமென உவமையை அமைத்தமையின் (74) இச்சிறப்புப் பெயரால் இவர் வழங்கப்பட்டார்.
(7). ஓரேருழவனார்: தலைவியைக் காண்பதற்கு விரையும் தன் நெஞ்சிற்கு ஒரு தலைவன் ‘ஈரம்பட்ட செவ்விப்பைம்புனத்து ஓரேருழவனை’ உவமிப்பதாகச் செய்யுள் செய்தமையின் (131) இவர் இப்பெயர்க்கு உரியரானார்.
(8). கூவன் மைந்தன்: துன்பத்தை வெளிப்படக் கூற மாட்டாது துயருறும் தலைவிக்கு இரவிலே கூவலில் குராற் பசு