குறுந்தொகை


civ


வீழக் கண்ட ஊமனை உவமித்தலின் (224) இப்பெயர் இவருக்கு உரியதாயிற்று. மைந்தன் என்பது இவரது இயற்பெயர் போலும்.

    (9). காலெறி கடிகையார்: தலைவியின் எயிற்று நீரின் இனிமைக்கு அடிக் கரும்பில் வெட்டிய துண்டத்தைத் தின்றதால் உண்டாகும் இனிமையை உவமித்து,

  
“... ... ... ... கரும்பின் 
  
 காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன 
  
 வாலெயி றூறிய வசையி றீநீர்”     (267) 

எனச் சிறப்பித்தலின் இவர் இங்ஙனம் குறிக்கப் பெற்றார்.

    (10). ஓரிற்பிச்சையார்: அறிவர் பெறும் உணவை ஓரிற் பிச்சை எனக் குறித்தலின் (277) இப் புலவர் இப் பெயருடையரானார்.

    (11). கல்பொரு சிறுநுரையார்: தலைவனைப் பிரிந்திருக்க மாட்டாத தலைவி அப்பிரிவினால் உண்டாகும் துன்ப மிகுதியைப் புலப்படுத்தி,

  
“யாமெங் காதலர்க் காணே மாயிற் 
  
 செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் 
  
 கல்பொரு சிறுநுரை போல 
  
 மெல்ல மெல்ல வில்லா குதுமே”     (290) 

எனக் கூறுவதாகப் பாடினமையின் இவர் இக் குறியீடு பெற்றார்.

    (12). கள்ளிலாத்திரையனார்: கள் குடிக்கும் விருப்பத்தினால் சில நண்பர்கள் கூடிக் கொண்டு சென்றதைக் கள்ளிற்கேளிராத் திரையெனக் குறித்தலின் (293) இவர் இச் சிறப்புப் பெயரால் வழங்கப்பெற்றார்.

    (13). குப்பைக் கோழியார்: தலைமகள் தன் நோயைத் தீர்ப்பார் ஒருவரும் இன்றித் தான் வருந்துவதைக் குப்பைக் கோழித் தனிப்போருக்கு உவமிப்பதாக ஒரு செய்யுள் (305) செய்தலின் இந் நல்லிசைப் புலவர் இப்பெயரைப் பூண்டார்.

    (14). பதடிவைகலார்: தலைவியோடு பழகாத நாளைப் பதடி வைகல் என்று (323) சொல்லுதலின் இவர் இக்குறி பெற்றார்.

    (15). கவைமகன்: இரட்டைப் பிள்ளைகளைக் கவைமகவு எனக் கூறி அவர்கள் நஞ்சு உண்டதை உவமையாக எடுத்தாண்ட மையின் (324) இச் சான்றோர் இவ்வாறு குறிக்கப் பெற்றார்.

    (16). வில்லக விரலினார்: பரத்தையும் தலைவனும் ஒன்று பட்டதற்கு வில்லைப் பிடித்த விரல்களை உவமித்து,

  
“வில்லக விரலிற் பொருந்தி”     (370)  

எனப் பாடுதலின் இவர் இக்காரணப் பெயர் பெற்றார்.