(17). கங்குல் வெள்ளத்தார்: இரவினைக் கண்டு தலைவி அஞ்சி,
| “கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே” (387) |
எனக் கூறுவதாக அமைத்தலின் இவர் இவ்விசேடப் பெயரை அடைந்தார்.
(18). குறியிறையார்: குறமகாரைக் குறமகளீன்ற குறியிறைப் புதல்வர் எனக் (394) குறித்தலின் இவர் இப்பெயர் பெற்றார்.இப் புலவர்களுள் பதின்மூவர் தாம் கூறிய உவமை நயத்தால் பெயர் பெற்றவர்களாதல் காண்க. இதனால் புலமை ஆற்றல் உவமையால் வெளிப்படும் என்னும் பண்டையோர் கொள்கை தெளிவுறும்.
புலவர்களுடைய ஊர்கள்
பல புலவர்களின் பெயர்களோடு அவர்களுடைய ஊர்களும் சேர்த்துச் சொல்லப்படுகின்றன. அவ்வூர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விரவி உள்ளனவாகத் தோன்றுகின்றன. அவையாவன: (1) அரிசில், (2) அள்ளூர், (3) ஆலங்குடி, (4) ஆலத்தூர், (5) இடைக்காடு, (6) இருந்தையூர், (7) ஈழம், (8) உகாய்க்குடி, (9) உரோடகம், (10) உறையூர், (11) ஐயூர், (12) ஒக்கூர், (13) கச்சிப்பேடு, (14) கடம்பனூர், (15) கடியலூர், (16) கருவூர், (17) கழார், (18) காவிரிப் பூம்பட்டினம், (19) கிடங்கில், (20) கிளி மங்கலம், (21) குடவாயில், (22) குறுங்குடி, (23) கூடலூர், (24) கோழி, (25) கோவூர், (26) சிறைக்குடி, (27) செல்லூர், (28) தங்கால், (29) பெருங்குன்றூர், (30) பொதுக்கயம், (31) மதுரை, (32) மாங்குடி, (33) மாடலூர், (34) மிளை, (35) வெள்ளூர், (36) வேம்பற்றூர், இவ்வூர்களுள் உறையூர், கருவூர், காவிரிப் பூம்பட்டினம், மதுரை என்னும் பெரிய நகரங்களில் பல புலவர்கள் வாழ்ந்து வந்தனர்.
சாதி
புலவர்களுடைய சாதியை வெளிப்படுத்தும் பெயர்கள் பல. கபிலர் முதலிய சிலர் அந்தணர் என்பது வேறு வகையால் தெரிய வருகின்றது. ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் அரசர்களுள் ஒரு வகையினன் என்பதை அவன் பெயர் தெரிவிக்கின்றது. குட்டுவன், கண்ணன், நம்பி குட்டுவன் என்பவர்களும், சேரமான் சாத்தன், சேரமான் எந்தை என்பவர்களும் சேரர் பரம்பரையினராகத் தோன்றுகின்றனர். சோழர்களுள் கோப்பெருஞ் சோழனது செய்யுள் ஒன்று இந்நூலில் உள்ளது. அண்டர் மகன் குறுவழுதி, பாண்டியன் பன்னாடு தந்தான் என்பார் தம் பெயராலேயே