குறுந்தொகை


cvi


பாண்டிய மன்னர் பரம்பரையினர் என்பதைப் புலப்படுத்துகின்றனர். கோக்குளமுற்றன், கோவேங்கைப் பெருங்கதவன் என்னும் பெயர்களிலுள்ள கோவென்னும் அடை அவர்கள் முடியுடை மன்னர் குலத்தினர் என்பதை அறிவிக்கின்றது. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என்பவர் வாணிகர் என்றும், அவர் ஆடை வியாபாரம் செய்தனர் என்றும் அவர் பெயர் அறிவிக்கின்றது. வேளாளர்களுள் வேளென்னும் பெயரால் அறியப்படுவாரும், கிழாரென்னும் பெயரால் அறியப்படுவாரும் பலர். மூதெயினனார் என்னும் ஒரு புலவர் மறவராகக் கருதப்படுகின்றார்.

  
தொழில்

     புலவர்கள் தொழிலைச் சில பெயர்கள் உணர்த்துகின்றன. பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்பவர் பாண்டியனுக்குப் படைத் தலைவராக இருந்தார். செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் என்பவர் அரசாங்கத்துச் செய்திகளை அறிவிக்கும் கருமத் தலைவராக இருந்தனர். குலபதி நக்கண்ணனாரும், கணக்காயன் தத்தனாரும், ஆசிரியன் பெருங்கண்ணனாரும் ஆசிரியத் தொழில் உடையார். மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார் எழுதும் தொழிலினர். கொல்லன் அழிசி, தங்கால் முடக் கொல்லனார், மதுரைக் கொல்லன் புல்லன் (புலவன்), மதுரைப் பெருங்கொல்லன் என்பார் கொற்றொழிலையும், உலோச்சனார் என்பவர் உலோச்சென்னும் தொழிலையும், உறையூர் முதுகூத்தனார், வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் என்னும் இருவரும் கூத்தாடும் தொழிலையுமுடையார் என்பதை அவர்கள் பெயர்களே புலப்படுத்துகின்றன.

     இவற்றால், அரசர்களும் அரசியலில் துணை புரியும் படைத் தலைவர் முதலியோரும் பல்வேறு சாதியினரும் பல தொழிலினரும் தமிழை ஆராய்ந்து புலமை உற்று விளங்கியதை அறியலாம். தமிழ்ப் புலமையில் அவர்களுக்குள் வேற்றுமை பாராட்டப் பெறவில்லை. அவர்கள் மனங்கலந்து பழகியிருத்தலும் கூடும். சங்கத்தில் அவர்கள் தம்முடைய புற வேற்றுமைகளை மறந்து தமிழால் பிணிக்கப்பட்டு ஒன்றி அக் காலத்தில் இருந்தனர் என்று கருத இடம் உண்டு. அவர்கள் செய்யுட்கள் இந்நூலில் கோர்க்கப் பெற்று ஒன்றுபட்டு விளங்குவதை இப்பொழுது காண்கின்றோம்.

  
பெண் புலவர்

    இப்புலவர்களுள் அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஊண்பித்தை, ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், கச்சிப்பேட்டு நன்னாகையார், காக்கை பாடினியார் நச்செள்ளையார்,