சில வழக்காறுகள்
தமிழ் இலக்கண உரைகளில் உதாரணங்களாகப் பல இடங்களில் கொற்றன், சாத்தன், தேவன், பூதன் என்னும் நான்கு பெயர்கள் காட்டப் பெறுகின்றன. இவை அக் காலத்தில் மக்களுக்கு மிகுதியாக இட்டு வழங்கும் பெயர்கள் என்று தோற்றுகின்றன. புலவர் பெயர்களிலும் இந்நால்வகைப் பெயர்களைக் காணலாம்.
(1). கொற்றன்: இருந்தையூர்க் கொற்றன் புலவன், உறையூர் முதுகொற்றன், கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன், கோழிக் கொற்றனார், கொற்றனார், செல்லூர்க் கொற்றன், படுமரத்து மோசி கொற்றன், மதுரை ஆசிரியன் கோடங்கொற்றன், வெண் கொற்றன்;
(2). சாத்தன்: அழிசி நச்சாத்தனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கருவூர்ச் சேரமான் சாத்தன், செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன், பேரிசாத்தனார், மதுரைச் சீத்தலைச் சாத்தனார், வடமவண்ணக்கன் பேரிசாத்தனார்;
(3). தேவன்: கடுகு பெருந்தேவன், பாரதம் பாடிய பெருந்தேவனார், பூதத்தேவன், மதுரையீழத்துப் பூதன்றேவன், வாயிலான் தேவன்;
(4). பூதன்: இளம்பூதனார், ஈழத்துப் பூதன் தேவன், காவன் முல்லைப் பூதனார், சேந்தம் பூதனார், பூதத் தேவன், பூதம் புல்லன், மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன், வெண்பூதன்.
இவற்றையன்றி, ஆந்தை, கீரன், தத்தன், புலவன் என்னும் பெயர்கள் பல புலவர் பெயர்களோடு இணைந்து வழங்குகின்றன:-
(5). ஆந்தை: அஞ்சியாந்தை, ஓதலாந்தையார், சிறைக் குடியாந்தையார்;
(6). கீரன்: இளங்கீரனார், கழார்க்கீரன் எயிற்றியன், குடவாயிற் கீரனக்கன், குறுங்கீரன், சேந்தன் கீரன், தும்பிசேர் கீரனார், நக்கீரனார், படுமரத்து மோசி கீரனார், மடல் பாடிய மாதங்கீரனார்;
(7). தத்தன்: ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன், கணக்காயன் தத்தன், குழற்றத்தன், மதுரைக் கண்டர தத்தன், மதுரைவேளா தத்தன்;
(8). புலவன்: இருந்தையூர்க் கொற்றன் புலவன், உழுந்தினைம் புலவன், மதுரைக் காஞ்சிப் புலவன். புல்லன் என்று வருவனவும் புலவன் என்று கொள்ளற்குரியன போலும்.