குறுந்தொகை


cix


தெய்வப் பெயர்கள்

     புலவர்க்குரிய பெயர்களில் இறையனார், உருத்திரன், கண்ணன், கந்தன், குமரன், சத்திநாதன், சாத்தன், தாமோதரன், தேவன், பதுமன், பெருந்தேவனார், பேரெயின் முறுவலார், வெண்பூதி என்பன தெய்வப் பெயர்களாகத் தோன்றுகின்றன. கந்தன் என்பது கந்துடை நிலையில் வழிபடப் பெறும் கடவுளின் பெயர். சாத்தன் என்பது ஐயனார் பெயர். பதுமன் என்பது பிரமதேவன் பெயர். கண்ணன், தாமோதரன் என்பன திருமாலின் பெயர்கள். குமரன் என்பது முருகவேள் பெயர். இறையனார், உருத்திரன், சத்திநாதன், பெருந்தேவனார், பேரெயின் முறுவலார், வெண்பூதி என்பன சிவபிரானைக் குறிக்கும் பெயர்கள். பெருந்தேவன் என்பது மகாதேவன் என்னும் திருநாமத்தின் பொருளுடையது. பேரெயின் முறுவலார் என்பது திரிபுரங்களை முறுவலால் எரித்ததைக் குறிக்கும் பெயர் என்றும், வெண்பூதியார் என்பது திருநீற்றை அணிந்ததைக் குறிப்பதென்றும் தோற்றுகின்றன.

  
பிற பெயர்கள்

    தெய்வப் பெயரை அன்றிப் பூதத்தின் பெயரையும் பேய் என்னும் பெயரையும் உடைய புலவர்களை இந்நூலால் அறிகின்றோம். முதல் ஆழ்வார்களில் இருவர் பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் பெயரை உடையவராக விளங்குதல் இங்கே கருதற்குரியது.

    பாரதத்தில் காணப்படும் சல்லியனது பெயரை ஒரு புலவர் பூண்டுள்ளார். சாண்டிலியன், கார்க்கியர் என்னும் முனிவர் பெயர்களைச் சிலர் கொண்டுள்ளனர்.

     வேறு வகையான பெயர்கள் பல உள்ளன. பல பெயர்கள் இக் காலத்தாருக்கு விநோதத்தை உண்டாக்குவன. அவற்றிற்குரிய காரணத்தை இப்பொழுது அறிய இயலவில்லை.

     உறுப்புக் குறை, சாதி, தொழில் முதலியவற்றோடு சார்த்திப் புலவர்களில் சிலர் பெயர்கள் வழங்குவதை உற்று நோக்கும் போது அவற்றாலும் பிற வகையினாலும் அவர்களுடைய கல்விப் பெருமை குறையவில்லை என்பதும் அவர்களைக் குறிக்கும் அடையாளமாகவே அத்தகைய முறை கொள்ளப்பட்டது என்பதும் புலனாகின்றன; எல்லாவற்றிலும் புலமையே தலைமை பெற்று விளங்கியது என்ற கருத்து உறுதி ஆகின்றது.