பாடினோர் வரலாறு
(கு-பு) பாடினோர் பெயருக்கு அடுத்தாற்போல் ( ) இந்த நக வளைவுக்குள் இருக்கும் எண் அவர் இயற்றிய குறுந்தொகைச் செய்யுளைக் குறிக்கும்.
அஞ்சிலாந்தையார் (294): அஞ்சில் என்பது ஓர் ஊர். ஆதன் தந்தையார் என்னும் தொடர்மொழி ஆந்தையார் என்று மருவிற்று. அஞ்சில் என்னும் ஊரினராதலின் இவர் அஞ்சிலாந்தையார் என்னும் பெயர் பெற்றார். இவர் குறிஞ்சி, நெய்தல் வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தலைவன் களவில் தலைவியோடு கடலாடுதலும், தலைவி ஆயத்தோடு இருக்கையில் அவளுடன் குரவையாடுதலும் அதன் காரணமாக அலரெழுதலும் இவர் வாக்கில் காணப்படும் செய்திகள். இவர் மகளார் நாகையார் என்பாரும் இவரை ஒப்ப நல்ல புலமை வாய்ந்தவர். இவர் பெயர் சில பிரதிகளில் அஞ்சியாந்தையார் என்றும் காணப்படுகிறது. இவர் பாடிய வேறு செய்யுள் நற்றிணை, 233. வேறு அடைமொழிகள் கொண்ட ஆந்தையார் பலர் உளர்.
அண்டர் மகன் குறுவழுதியார் (345): தொகை நூல்களுள் குறுவழுதியார் என்று ஒரு பெயர் வருகிறது. இவ்விரு பெயரினரும் ஒருவரோ, வேறோ என்று தெரியவில்லை. வழுதி என்ற பெயரால் இவர் பாண்டிய மரபினர் என்பது போதரும். மேலே குறித்த குறுந்தொகைச் செய்யுளை அன்றி, இவர் புறநானூற்றில் 346-ஆம் செய்யுள் இயற்றியதாகவும், குறுவழுதியார் என்பவர் அகநானூற்றில், 150, 228-ஆம் செய்யுட்கள் இயற்றியனவாகவும் உள்ளன. இவர் வாக்கில் வந்துள்ள “கல்வி என்னும் வல்லாண் சிறாஅன்” (புற.நா.346) என்பது பாராட்டற்பாலது.
அணிலாடு முன்றிலார்(41): இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. மக்களின் நடமாட்டமில்லாத முற்றத்தில் அணில் ஓடிக் கொண்டிருக்கும். தலைவன் பிரிந்தபோது பொலிவு இழந்த தலைவிக்கு மக்கள் போகிய அணிலாடு முன்றிலை உடைய இல்லத்தை உவமை கூறினமையின் இவர் பெயர் இங்ஙனம் அமைந்தது. எட்டுத் தொகையுள் இக் குறுந்தொகைச் செய்யுளை அன்றி வேறொன்றையும் இவர் இயற்றியதாகத் தெரியவில்லை.
அம் மூவன், அம் மூவனார் (49, 126, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401) : இந்த இருவரும் ஒருவரே, நற்றிணை, 18-ஆம் செய்யுளிலும், புறநானூறு 209-ஆம்