செய்யுளின் பின்னுள்ள வாக்கியத்திலும் மூவனென்று ஓர் உபகாரியின் பெயர் வந்திருத்தலால் மூவனென்ற பெயர் ஒன்று பண்டைக் காலத்தில் வழங்கி வந்தது என்று தெரிகிறது. இவர் நெய்தல் திணையில் மிகப் பயின்றவர். அதன் வளங்களை விளங்கப் பாடுதலில் மிக்க ஆற்றலை உடையவர். சேரன், பாண்டியன் என்னும் முடியுடைய வேந்தர் இருவராலும் திருக்கோவலூரை ஆண்ட காரி என்னும் வள்ளலாலும் ஆதரிக்கப் பெற்றவர். சேர நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியும் அந் நாட்டின் கண்ணதாகிய மரந்தையும் பாண்டி நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய கொற்கையும், நடு நாட்டின் கண்ணதாகிய கோவலூரும் இவரால் பாராட்டப் பெற்றிருத்தலின் இவர் அந் நகரங்களில் இருந்தவர் என்றும், இவர் காலத்தில் அவைகள் மிக்க விளக்கமுற்றிருந்தன என்றும் கொள்ளலாம்.
அகநானூற்றில் பெண்ணை ஆற்றை இவர் சிறப்பித்திருக்கிறார். ‘கடலினும் நட்பு பெரியது’
(ஐங். 184), ‘எப்பொழுதும் மொழியத் தக்க சொற்கள் மெல்லிய வினிய மேவரு தகுந’, ‘நல்கூர்ந்தார் வயின் நயனில ராகுதல் தகாது’ என்பன இவர் எடுத்துக் காட்டும் சில நீதிகளாகும். ஐங்குறு நூறு, கிழவற்குரைத்த 13-ஆம் பத்தில் தலைவி மிக்க இளமை உடையாள் என்றதற்கேற்ப அவளுடைய பேதைப் பருவ விளையாட்டுக்களை அழகாக உரைத்திருத்தல் படித்து இன்புறற்பாலது. தலைவன் தன் நாட்டையும் கொடுத்துத் தலைவியை மணக்கத்துணிந்தனன் என்று தலைவியின் பெறற்கருமையை இவர் பாராட்டியிருக்கிறார்;
ஐங்குறு.147. எட்டுத் தொகையில் இவர் இயற்றிய வேறு செய்யுட்கள் - 116
(நற்றிணை - 10; ஐங்குறுநூறு, நெய்தல் -100; அகநானூறு - 6) அரிசில்கிழார் (193): கொள்ளிடத்தின் வடபால் அரியிலூர் அல்லது அரியில் என்று வழங்கும் ஓரூரின் பெயர் அரிசில் என்பதன் மரூஉவாகக் கருதப்படுகின்றது. “அரிசிற்கரை” என்று மைசூர் சமஸ்தானத்திலும் ஓர் ஊர் உள்ளது. கிழார் - உரியவர். கிழார் என்பது வேளாளார்க்கே உரிய சிறப்புப் பெயராக இருந்தது என்று தெரிதலின், இவர் வேளாண் மரபினராக இருத்தல் கூடும். இஃது, ‘‘ஊரும் பேரும்” (தொல்.மரபு 74) என்னும் சூத்திரத்தின் உரையில் காட்டிய பெயர்களாலும், திருத் தொண்டர் புராண வரலாற்றின் 2-ஆம் செய்யுளில் எடுத்துக் காட்டிய பெயர்களாலும் அறியலாகும். கடையேழு வள்ளல்களுள் ஒருவனாகிய பேகனைப் பாடி இருத்தலின் இவர் அவன் காலத்தினராக நினைக்கப்படுகின்றார்; அவனால் துறக்கப்பட்ட கண்ணகி