குறுந்தொகை


cxii


என்பவளை அவனோடு சேர்த்தல் வேண்டி அவனைப் பாடினர்; இந்தக் கண்ணகி சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட கண்ணகி அல்லள். அதியமான் தகடூர்பொருது வீழ்ந்த எழினியின் பிரிவாற்றாது வருந்தி இவர் புலம்பினர்; பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தைப் பாடித் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் ஒன்பது நூறாயிரங் காணம் பரிசில் பெற்று அவன்பால் அமைச்சுத் தொழில் பூண்டு விளங்கியவர். தகடூர் யாத்திரை என்னும் நூலில் இவரால் பாடப்பட்ட பாடல்களும் சில உள்ளன என்பது தொல்காப்பியப் புறத் திணையியலில் 8, 12-ஆம் சூத்திர முதலியவற்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் விளங்குகின்றது. திருவள்ளுவ மாலையில் உள்ள, “பரந்த பொருளெல்லாம்” என்னும் 13-ஆம் செய்யுள் இவர் இயற்றியதாகக் கூறப் பட்டிருத்தலின், திருவள்ளுவர் காலத்தினராகிய கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவராக இவரைச் சொல்லுவதற்கு இடம் உண்டு. இவர் பெயர் அரியில் கிழார் என்றும் வழங்குவர். புறநானூற்றில் இவரால் பாடப்பெற்ற குதிரை மறம், தானை மறம், பேய்க் காஞ்சி, மகட்பாற் காஞ்சி என்னும் துறைகள் அறிந்து இன்புறற்பாலன. பதிற்றுப் பத்து, 8-ஆம் பத்தின் இறுதியில் அமைந்திருக்கும், “பாடிப்பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று கோயிலிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தொடு அரசு கட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்கவென்று அமைச்சுப் பூண்டார்” என்னும் வாக்கியத்தால் இவருடைய குண விசேஷங்களும் மேம்பாடும் விளங்கும்; (கோயிலாள் - பட்டத்தேவி; காணம் -ஒருவகைப் பொற்காசு; அரசு கட்டில் - சிங்காதனம்; அமைச்சு - மந்திரி வேலை). மேற்கூறிய சேரவரசனும் உக்கிரப் பெருவழுதியும் பேகனென்னும் வள்ளலும் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியும் இவர் காலத்தவர். இவருடன் இருந்த புலவர்: கபிலர், பரணர், பெருங்குன்றூர்கிழார், பொன் முடியார் முதலியோர். எட்டுத் தொகையில் இவர் இயற்றியுள்ள வேறு செய்யுட்கள் 17 (பதிற்றுப் பத்து-10, புறநானூறு-7)

    அழிசி நச்சாத்தனார் (271): அழிசி என்ற சிற்றரசன் ஒருவன் ஆர்க்காடு என்ற ஊரை உடையவன் என்பது இந்நூல் 258, நற்றிணை 190-ஆம் செய்யுட்களால் தெரிய வருகிறது. ‘ந’ என்பது சிறப்புப் பற்றி வந்தது. “ஒருநாள் நட்புப் பூண்டேன்; அது பல நாள் எனக்குத் துன்பம் தருவ தாயிற்று” என்று தலைவி தலைவனது பரத்தைமையைக் குறிப்பித்தலாக அமைத்திருப்பது பாராட்டற்குரியது. அழிசி என்பது அழுசி எனவும் வழங்கும்.