குறுந்தொகை


cxiii


    அள்ளூர் நன்முல்லையார் (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237): அள்ளூர் என்பது பாண்டி நாட்டில் சிவகங்கைக் கண்ணதோர் ஊர்; இது, “கொற்றச் செழியன், பிண்ட நெல்லி னள்ளூ ரன்னவென், ஒண்டொடி” (அகநா. 46) என்னும் இவர் பாடலால் விளங்குகின்றது; “கிள்ளை, வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம், புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப், பொலங்கல வொருகா சேய்க்கும்” என்னும் உவமையும், “அரும்பனி யச்சிரந் தீர்க்கும், மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே”, “அவர் நமக், கன்னையுமத்தனு மல்லரோ” (குறுந். 67, 68, 93) என்பனவும் இவருடைய நுண்மாண் புலமை முதலிய வற்றை விளக்கும். இவர் பெயர் அள்ளூர் நன்முல்லை எனவும் வழங்கும். எட்டுத் தொகையில் இவர் இயற்றிய வேறு செய்யுட்கள்2 (அகநா. 1; புறநா. 1)

    அறிவுடைநம்பி (230): இவரும் பாண்டியன் அறிவுடை நம்பி என்பாரும் ஒருவர் என்றே தெரிகிறது. “அறிவுடையரசன் இறை கொள்ளும் நெறியை அறிந்து கொள்ளின் அவன் நாடு கோடி பொருளை ஈட்டிக் கொடுத்துத் தானும் மிகவும் தழைக்கும்” என்று பிசிராந்தையார் இவருக்குச் செவியறி வுறுத்துவதனால் (புறநா. 184) இவர் ஒரு காலத்தில் குடிகளிடத்தில் அன்பு கெடப் பொருள் வவ்வினாரோ என்று கருத இடம் உண்டு. புதல்வரில்லார்க்கு இருமைப் பயனும் இல்லை என்று இவர் பாடியுள்ளார்; புறநா. 188. நெய்தலை யும் குறிஞ்சியையும் இவர் புனைந்து பாடியிருக்கின்றனர். எட்டுத் தொகையுள் இவர் பாடியனவாக உள்ள வேறு பாடல்கள் 3 (நற். 1; அகநா.1, புறநா. 1)

    ஆசிரியன் பெருங்கண்ணனார் (239): ஆசிரியன் என்ற அடை மொழி வேறு சில புலவருக்கும் உண்டு. “கிழவோற்குத் தொடி ஞெகிழ்ந்தன; தோள் சாயின; இனி விடப்படும் நாண் உண்டோ?” என்று தலைவி கூறுவதாக இவர் பாடி யுள்ளார்.

    ஆதிமந்தியார் (31): நல்லிசைப் புலமை வாய்ந்த மெல்லியலார் களுள் இவர் ஒருவர். இவர் பெயர் மந்தி எனவும் வழங்கும். வஞ்சிக் கோனாகிய ஆட்டனத்தி என்பானை இவர் மணந்தவர். அவன் பெயர் அத்தி எனவும் வழங்கும். ஒரு சமயம் ஒரு நீர் விழாவில் கழார் என்னும் ஊரைச் சார்ந்த காவிரித் துறையில் கணவனுடன் இவர் நீராடுகையில், கணவனைக் காவிரி வெள்ளத்தில் கவர்ந்து கொண்டது என்பதும் அதனால் மந்தியார் தம் கணவனைக் காணாது