கவன்று பலவிடத்தும் தேடித் தேடிச் சென்று முடிவில் கடற்கரையில் அரற்றி நின்றார் என்பதும் அப்போது இவரது கற்பின் பெருமையால் கடல், கரைக்கணித்தாக அவனைக் கொணர்ந்து நிறுத்தக் கண்டு இவர் மகிழ்ந்து தழுவிச் சேர்ந்தனர் என்பதும் அகநா. 45, 76, 222, 236, 276, 396-ஆம் பாடல்களாலும், “இது (குறுந். 3) காதலாற் கெடுத்த ஆதிமந்தியார் பாட்டு” என்ற நச்சினார்க்கினியர் உரையினாலும் (தொல். அகத். 54), சிலப். 21:11-5-ஆம் அடிகளாலும் உணரப்படும். வெள்ளி வீதியார் என்ற பெண்பாற் புலவர், பரணர் முதலியோர் இவரைப் பாராட்டியுள்ளனர். அகநா. 147ஆம் பாடலால் ஒளவையாருக்குக் காலத்தால் முந்தியவர் வெள்ளி வீதியார் என்பதும், அகநா. 45-ஆம் பாடலால் வெள்ளி வீதியார்க்குக் காலத்தால் முந்தியவர் ஆதிமந்தியார் என்பதும் விளங்குகின்றன.
ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தனார் (184): ஆரிய அரசர் பலர் தமிழின்பால் ஆர்வம் கொண்டு அதனைக் கற்றமை விளங்கும். கபிலர் ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குக் குறிஞ்சிப் பாட்டை இயற்றினார் என்பர். “அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கில்லை” என்று கூறி ஆன்றோரின் பெருமையை இவர் புலப்படுத்தி யுள்ளார். சிலப்பதிகாரத்தில் ஆரிய மன்னர் என்னும் ஒரு வகையார் கூறப்படுகின்றனர். இவர் அவர்களுள் ஒருவரோ வேறோ தெரியவில்லை.
ஆலங்குடி வங்கனார் (8, 45): ஆலங்குடி என்னும் பெயருள்ள ஊர்கள் பல இருத்தலின் இவர் ஊர் இன்ன ஆலங்குடி என்று நிச்சயிக்கக் கூட இல்லை. வேறு தொகை நூல்களில் ஐந்தும் (நற். 3, அகநா. 1, புறநா. 1), திருவள்ளுவ மாலையில் ஒரு செய்யுளும் இவர் செய்தனவாக இப்பொழுது காணப் படுகின்றன. புறத்திணைப் பாடலொழிய மற்ற எட்டுத் தொகைப் பாடல்கள் யாவும் மருதத் திணையைச் சார்ந்தன. காமக்கிழத்தியர் தலைவனை ஆடிப் பாவை போன்றான் என்று இகழ்தலும் (குறுந். 8), உயர்குடிப் பிறந்த கற்புடை மகளிர் தம் தலைவர் கொடுமை புரியினும் அதனை மறந்து அன்பு பாராட்டுதலும் (குறுந். 45) கூறும் முகத்தால் இவர் இருவேறு மகளிருக்கும் உள்ள வேற்றுமையை நன்கு புலப்படுத்துகின்றார். இவர் பாடிய நற். 330-ஆம் பாடலும் இவ் வேற்றுமையையே காட்டும். “தலைவி தன் வயிற்றை அலைத்துக் கோடற் பொருட்டாகச் செறிந்த நம் தொடி ஒலிப்ப வீசி அவள் உறையும் சேரிக்கண் சிறிது பொழுது