சூழ் வருவோம் வா, தோழீ” என்று பரத்தை தலைமகள் புறங்கூறினாளாகக் கேட்டு மொழிந்தாள் என்று (அகநா. 106) இவர் கூறியிருப்பதும் பரத்தையின் கொடுமையையே காட்டுகிறது.
ஆலத்தூர் கிழார் (112, 350): ஆலத்தூரில் பிறந்தவர் இவர். ஆலத்தூர் என்ற பெயருள்ள ஊர்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. இதனை இன்ன ஆலத்தூர் என்று சொல்ல முடியவில்லை. இவர் வேளாளர். “கணந்துட் பறவை ஆறலை கள்வர் வருவதை அறிந்து ஒலிக்கும் இயல்புடை யது” (குறுந். 350) என்பதை இவர் குறித்துள்ளார். “பிறர் கூறும் பழிமொழியை அஞ்சினால் காமம் மெலிவடையும்; பிறர் பழித்தல் அறும்படி அக்காமத்தை விட்டு விடின் எனது பெண்மை நலனும் கற்பும் அழிந்து விடும்” என்று தலைவி கூறுவதாகக் காமம் கவ்வை இவை இரண்டாலும் வரும் துன்பங்களை அழகாகக் குறித்துள்ளார்; குறுந். 112. நன்றியறிவும், அரசர்களை இடித்துக் கூறும் மன வலியும் உபகாரிகளின் இயல்பை வெளிப்படுத்தும் அன்புடைமை யும் போர் செய்யும் முறையை விளக்கும் இயல்பும் பொருள்களின் இயற்கை நலனைப் புலப்படுத்தும் நுண்ணறிவும் உடையவர் இவர். இவர் செய்தனவாகப் புறநானூற்றில் 5 செய்யுட்கள் காணப்படுகின்றன. இவரால் பாடப்பட்டோர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனும் சோழன் நலங்கிள்ளியுமாவர்.
இடைக்காடனார்(251): இடைக்காடு என்னும் ஊரினராதல் பற்றி இவர் இப்பெயர் பெற்றார். இடைக்காடு என்பது பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ளது. இவர் சாதியில் இடையர். “இவர் கபிலருடைய தோழர்; மற்றப் புலவர்களிடத்தும் அன்புடையவர்; பெரும் பொருளைச் சிறு கவியுள் அடக்கும் இயல்பினர்; கவி செய்யும் ஆற்றல் மிக்கார்” என்பது திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்தால் அறியலாகும். இவர் கூறும் உவமைகள் மதிக்கற்பாலன. இவருடைய செய்யுட்களை உற்று நோக்குமிடத்துப் பெரும்பான்மையாக முல்லைத் திணை, மழை, இடைச் சாதி என்பவற்றின் இயல்புகளும் சிறுபான்மையாக மருதத் திணை வளமும் அமைந்திருப்பது விளங்கும். சில பாடல்கள் இடைக்காடர் ஊசி முறி என்று பழைய உரைகளில் காணப்படுகின்றன. இதனால் ஊசி முறி என்ற நூல் ஒன்று இவரால் இயற்றப்பட்டது என்று தெரிகிறது. ஊசி - எழுத்தாணி. இவரால் பாடப்பட்டோன்