குறுந்தொகை


cxvi


சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். வேறு தொகை நூல்களில் இவர் பாடியவை -26 (நற். 3; அகநா. 6; புறநா. 17). அன்றியும் இவர் பாடிய செய்யுள் ஒன்று திருவள்ளுவ மாலையில் உள்ளது.இருந்தையூர்க் கொற்றன் புலவனார் (335): திருக்கோவலூர் தாலூகாவில் இருந்தை என்று ஓர் ஊர் உள்ளது. இருந்தையூர் என்பது அதுவாக இருக்கலாம் என்று தோற்றுகிறது. இந்த ஊரிலேயே கருங்கோழி மோசியார் என்ற வேறோர் இடைச் சங்கப் புலவர் இருந்தார் என்று தெரிய வருகிறது; சிலப்.உரைப்.அடியார்.

    இளங்கீரந்தையார் (148): கீரன் தந்தையார் என்ற தொடர் கீரந்தையார் என்று மருவியது. கீரந்தையார் என்று இடைச் சங்கப் புலவருள் ஒருவர் இருந்தார் என்பது (சிலப். அடியார்) தெரிய வருகிறது. பரிபாடலில் ஒரு பாட்டை எழுதியவரும் திருவள்ளுவ மாலையில் ‘தப்பா முதற்பாவாற்’ என்னும் செய்யுளை இயற்றியவரும் கீரந்தையார் என்று தெரிகிறது. அவருக்கும் இவ்விளங் கீரந்தையாருக்கும் தொடர்பு உண்டோ இல்லையோ தெரியவில்லை. கீரந்தையாரினும் இவர் இளைஞராய் இருத்தல் பற்றி அவரினும் வேறுபடுத்த இவர் பெயர் இளங்கீரந்தையார் என்று வழங்கியிருத்தல் கூடுமோ என்று தோற்றுகிறது.

    இளங்கீரனார் (116): இவரும் எயினந்தை மகனார் இளங்கீரனார் என்பவரும் ஒருவரே என்று சிலர் கூறுவர். அங்ஙனமாயின் இவர் வேடர் மரபினர். இவர் பாலைத் திணையைப் பலவாறு பாடியுள்ளார். தலைவியின் இனிமைக்கு வினை முடித்தலால் வரும் இனிமையும், மூங்கிலில் காற்றடித்தலால் உண்டாகும் ஓசைக்கு யானையின் நெட்டுயிர்ப்பும், தலைவன் நெஞ்சம் தலைவியுடன் ஒன்றுபட்டுக் கரைவ தற்கு ஈரம் காயாத பசிய மட்கலம் பெரு மழையில் கரைவதும் இவர் காட்டும் அரிய உவமைகளாகும்; நற். 3, 62, 308. வழக்கமாக மகளிர் பிறை தொழுதலையும் சுவரில் குறி அமைத்து நாள் எண்ணுதலையும் (அகநா. 239, 289) இவர் குறித்துள்ளார். ‘சோழன் உறந்தை’, ‘உதியன் மண்டிய ஞாட்பு’, ‘பொறையன் கொல்லி’ என்ற தொடர்களால் இவர் சோழனையும் சேரரையும் பெயர் கூறாமல் குறித்திருக்கிறார். பொருந்தில் என்னும் ஊரினராகிய இளங்கீரனார் என்னும் புலவர் ஒருவர் புறநானூற்றில் ஒரு செய்யுளையும் அகநானூற்றில் இரண்டு செய்யுட்களையும் பாடியுள்ளார். அவருக்கும் இவருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ