இல்லையோ என்பது தெரியவில்லை. எட்டுத் தொகையில் இவர் இயற்றியுள்ள செய்யுட்கள் 14
(நற். 6; அகநா. 8) இளம்பூதனார் (334): ‘அலைகளின் நீர்த் துளிகள் தம் ஈரமாகிய புறத்தை நனைப்ப அக்குளிரை வெறுத்துக் காக்கைகள் கடற்கரைச் சோலையில் தங்கும்’ என்று இவர் அவற்றின் இயல்பை அறிந்து கூறுவது பாராட்டத் தக்கது.
இறையனார் (2): மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள் இறையனார் என்ற பெயரால் வழங்கப் பெறுவர் என்பர். இவரது வரலாறு இந் நூலில் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் இரண்டாம் செய்யுளின் இறுதியில் விரிவாக உள்ளது.
ஈழத்துப் பூதன் றேவனார் (343): இவர் வேறு; 189, 360-ஆம் செய்யுட்களைப் பாடிய மதுரை யீழத்துப் பூதன்றேவனார் வேறு. இவர் குறிஞ்சித் திணையைக் குறித்துப் பாடியுள்ளார். யானையைத் தாக்கிய மிகுவலி யிரும்புலியேற்றை அந்த யானையின் முயற்சியின்றி அதன் கொம்பினால் குத்தப்பட்டு இறந்து கிடத்தலை அழகுபட இவர் கூறியுள்ளார்.
உகாய்க்குடி கிழார் (63): உகாய்க்குடி என்னும் ஊரில் பிறந்தவர் இவர். “ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லென” என்று இவர்கூறும் பொருட் சிறப்பு அருமையாக உள்ளது. இங்கே ஈதலைத் துய்த்தலுக்கு முன் இவர் அமைத்துள்ள நயம் படித்து இன்புறற்பாலது.
உருத்திரனார் (274): இவருக்கு அமைந்திருப்பது தெய்வப் பெயர். பாலை வழியின் இன்னாமையையும் தலைவியை உள்ளிச் செல்லின் அது கடத்தற்கு இனியதாக இருத்தலையும் நன்றாக இவர் கூறியுள்ளார்.
உரோடகத்துக் கந்தரத்தனார் (155): இப்பெயர், ‘உரோடகத்துக் காரத்தனார்’, ‘ஊரோடகத்துக் கந்தரத்தனார்’, ‘ஒரோடகத்துக் கந்தரத்தனார்’ என்று பலவாறு பிரதிகளில் உள்ளது. ‘உரைகடம்’ என்னும் பெயர் உள்ள மூன்று ஊர்கள் செங்கற்பட்டு ஜில்லாவில் இருக்கின்றன. ‘உரோடகம்’ என்பது அவற்றுள் ஒன்றன் திரிபாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. உழவர் காலையில் விதைக்க எடுத்துச் சென்ற வட்டிகளை மாலையில் வறியனவாக இல்லாமல் போதைக் கொணர்வர் என்று கூறுகிறார். தலைவிக்குப் பொருளின் உயர்வைப் புலப்படுத்தத் தலைவன் முல்லை படர்ந்த நொச்சியினது கிளையின் உயர்வைக் காட்டுவதாக இவர்