குறித்துள்ளார். அலர் தூற்றும் பெண்டிரை நரகம் புகுதற்கு உரியவர் என்று தலைவியின் கூற்றில் அமைத்திருக்கிறார். எட்டுத் தொகையில் இவர் இயற்றிய வேறு செய்யுட்கள் 4 (நற். 1; அகநா. 3)
உலோச்சனார் (175, 177, 205, 248): இவர் நெய்தல் திணையையே மிகுதியாகச் சிறப்பித்துள்ளார். இதனாலும் தலைவியின் கூற்றாக, ‘கழிசூழ் படப்பைக் காண்டவாயில் ... எம் அழுங்க லூரே’ (நற். 38) என்று கூறுவதனாலும் இவர் நெய்தல் நிலத்தைச் சார்ந்தவர் என்று ஊகிக்கலாம். கடலில் உப்பெடுத்தலை ‘வானம் வேண்டா உழவு’ (நற். 254) என்கின்றார். பொறையாறு என்ற ஊரினனான பெரியன் என்பானையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளியையும் இவர் குறித்துள்ளார். வியப்பைப் புலப்படுத்தப் பெண்டிர் தம் மூக்கினுச்சியில் சுட்டு விரலைச் சேர்த்தலையும், சிறுமியர் வண்டல் மண்ணாலே பாவை செய்து விளையாடுதலையும் (நற். 149, 191) வழக்கங்களாகக் கூறியுள்ளார். உலோச்சென்பது சைனர்கள் செய்து கொள்ளும் ஒரு கிரியை. அதனால் இவர் சைனர் என்று கொள்ளுவதற்கு இடமுண்டு. இவர் வாக்கில் எருமை மறம் என்னும் துறை விளங்கக் கூறப் பெற்றுள்ளது; புறநா. 273. எட்டுத் தொகையில் இவர் இயற்றிய வேறு செய்யுட்கள் 31 (நற். 20; அகநா. 8; புறநா. 3)
உழுந்தினைம் புலவன் (333): ஒரு காரியம் செய்கையில் அது நிறைவேறாமல் போனால் உண்டாகும் வருத்தத்தை இவர் ‘பணிக்குறை வருத்தம்’ என்று கூறியுள்ளார்.
உறையனார் (207): சுரஞ்செல் மாக்கட்கு ஒரு துணையுமின் றென்பதைக் குறிக்க இவர், “இனந்தீர் பருந்தின் புலம்பு கொடெள்விளி ... உயவுத் துணையாகும்” என்கிறார்.
உறையூர்ச் சல்லியன் குமாரனார் (309): உறையூரைச் சார்ந்த புலவர் பலர் உளர். ஒரு காலத்தில் அது கல்வியில் சிறந்திருந்தது என்பது இதனால் புலனாகும். பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு வாயில் நேர்ந்தமைக்குத் தோழி உழவர் தம் தொழிலை முடிப்பாராகி வரப்பில் வாடும்படி களைந்தெறிந்த நெய்தல் மீட்டும் தம்மை நீக்கிய வயலினிடத்து மலர்கின்றதை உவமையாகக் காட்டியுள்ளது பாராட்டற்பாலது. களையைக் களைந்த இடத்திலேயே போடக் கூடாது என்பதை இவர் அறிந்துள்ளார் என்று தெரிகிறது.