உறையூர்ச் சிறுகந்தனார் (257): தலைவன் பிரிந்த வழிக் காமமாகிய பகை தலைவியை இகலும் என்கிறார். பலா மரம் நிரம்பக் காய்த்துள்ளமையை அழகுபட வருணித்துள்ளார்.
உறையூர்ப் பல்காயனார் (374): யாப்பருங்கலம், யாப்பருங் கலக் காரிகை என்பவற்றின் உரைகளால் பல்காயனார் என்ற ஒருவர் யாப்பிலக்கணம் செய்துள்ளமை தெரிய வருகிறது. அவரும் இவரும் ஒருவரோ வேறோ என்று தெரியவில்லை. ஊர் மயக்கம் அடைந்துள்ளமைக்குத் தூக்கணங் குருவி பனை மேற்றொடுத்த கூட்டின் மயக்கத்தை உவமை கூறுகிறார். சில பிரதிகளில் இவர் பெயர் ‘பராயனார்’ என்று காணப்படுகிறது.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் (133): ‘முதுகண்’ என்பது பிராயத்தாலும் அறிவாலும் முதிர்ந்து, அரசர்க்கும் பட்டத் தேவிகளுக்கும் உசாத்துணையாக இருந்து நீதிகளைச் செவியறிவுறுத்தும் ஆண்பாலார் பெண் பாலார்களுக்கு உரிய பெயராகச் சிலாசாசன முதலியவற்றில் காணப்படுகின்றது; “முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென” (பெருங். 1.36: 198) என்று வருதலும் காண்க; இவர் உறையூர் அரசர்பால் அத்தொழிலை உடையவராக இருந்தார் போலும்; இவரால் பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி; இவர் காலத்துப் புலவர் அவனைப் பாடிய ஆலத்தூர் கிழாரும் கோவூர் கிழாரும் ஆவர்; இவர் சிறந்த குடியில் பிறந்தவருக்குத் தாமரைப் பூக்களையும், வளர்தல் முதலியவற்றை அடைந்த பொருள் குறைதல் முதலியவற்றையும் அடையும் என்பதற்குத் திங்களையும் உவமை கூறியிருத்தலும், அருளும் கொடையும் வெற்றிக்கும், அவையின்மை தோல்விக்கும் காரணம் என்பது புலப்பட, “அருள வல்லை யாகுமதி யருளிலர், கொடாமை வல்ல ராகுக, கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே” (27) என்று விளக்கி இருத்தலும் நன்கு மதிக்கற்பாலன; எட்டுத் தொகையுள் குறுந்தொகைச் செய்யுளையன்றி இவர் செய்தனவாகப் புறநானூற்றில் 5 செய்யுட்கள் உள்ளன.
உறையூர் முதுகூத்தனார் (முதுகூற்றனார்) (353, 371): “வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர், இன்கடுங் கள்ளி னுறந்தை” என்று இவரே கூறியிருத்தலால் தம்முடைய ஊரில் இவர் அன்புடையவர் என்பதும், அவ்வூர் அரசராகிய சோழரால் நன்கு மதிக்கப் பெற்றவர் என்பதும் வெளியாகின்றன; “உள்ளது, தவச்சிறி தாயினு மிகப்பல ரென்னாள், நீணெடும் பந்த ரூண்முறை யூட்டும், இற்பொலி