பகுதி. இவர் செய்தனவாகத் தொகை நூல்களில் காணப்படும் வேறு செய்யுட்கள் 7. (நற். 2; அகநா. 1; புறநா. 4)
ஒக்கூர் மாசாத்தியார் (126, 139, 186, 220, 275): முல்லைக் கொடி மலர்ந்திருத்தலை அது நகுதல் போலும் என்றும், காட்டுப் பூனையை அஞ்சிப் பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை ஒருங்கு சேர்க்கும் பொருட்டு அழைத்துக் கூவும் என்றும் கூறுகிறார். புறநானூற்றில் ஒரு மறக்குடி மக்களின் வீரச் செயல் இவரால் விசேடித்துப் பாராட்டப் பெற்றுள்ளது. இவர் பெண்பாலார். இவர் பாடல்கள் முல்லைத் திணையைப் பற்றி வருவன. ஒக்கூர் என்பது பாண்டி நாட்டில் திருக்கோஷ்டியூர்ப் பக்கத்தில் உள்ள ஓர் ஊர். இவர் பாடிய வேறு செய்யுட்கள்-3 (அகநா. 2; புறநா. 1)
ஒருசிறைப் பெரியனார் (272): இவர் தலைவியினுடைய கண்களுக்கு அவளது தன்னையர் கலையில்மேல் எய்த குருதி தோய்ந்த அம்பை உவமை கூறியுள்ளமையும், தேர்ப் பாகன் தலைவனை ஆற்றுவிப்பதாகக் கூறியுள்ளமையும் சிறந்த செய்திகளாகும். நாஞ்சில் வள்ளுவனைப் பாடிப் பரிசில் பெற்றவர். நாஞ்சில் மலையின் வளத்தையும் அதன் தலைவனது இயல்பையும் இவர் பாராட்டியிருக்கின்றார். இவர் பாடல்கள் முல்லையையும் குறிஞ்சியையும் பற்றியவை. இவர் இயற்றிய வேறு பாடல்கள் 2- (நற். 1; புறநா. 1)
ஓதஞானி (227): ஓதஞானி - பரந்த ஞானி வட சொற்றொடர். தலைவன் சிறைப் புறத்தானாக அவன் கேட்கும்படி தோழி தலைவியின் இற்செறிப்பை இதழ் குறைந்த கூழை நெய்தல் மலர் மேல் ஏற்றி இவர் குறிப்பித்திருப்பது ஒரு நயமாகும்.
ஓதலாந்தையார் (12, 21, 229): ஆதன் தந்தை என்பது ஆந்தை என்று மருவியது.பாலைத் திணையின் இயல்பைப் பாடுதலில் மிக்க ஆற்றலுடையவர். பாலைத் திணையில் பிரிதல் நிமித்தமே பயின்று வரினும், ‘தலைவி தலைவனை மணந்து அவனுடன் இனியளாய் இன்று வரும்’ எனக் கேட்ட செவிலி அதனை நற்றாய்க்குக் கூறும் செய்யுளை ஈற்றில் அமைத்து இத் திணைக்கு மங்கல முடிபு காட்டி இருத்தல் மிக அழகாய் உள்ளது. தாம் அன்பு வைத்திருப்பவருடைய அரிய பண்புகளை நினைக்குந்தோறும் ஒருவர்க்குற்ற வழிநடைத் துன்பம் முதலியன நீங்கும் என்பதை இவர் தெரிவிக்கிறார். ஒரு காதலி தான் கருதியவனையே கணவனாகக்கோடல் வேண்டும் என்று நினைப்பாள் என்றும் அவள் விரும்பும் தலைவனுக்கு மணம் செய்து கொடுக்க