விருப்பம் அற்ற தாயை அறனில் தாய் என்றும் தீ வினையை ‘அறனில் பால்’ என்றும் அந்தணர்க்குரிய கொள்கையைக் கூறும் இடத்து, ‘அறம்புரி பெருமறை நவின்ற நாவிற், றிறம்புரிகொள்கை’ என்றும் அறத்தைச் செய்வோர் அன்பைக் கருதுவது தகாது என்பதை, ‘அன்பில் அறனும்’ என்றும் இவர் கூறுகிறார். இவர் செய்யுட்களில் சொல் நயம், பொருள் நயங்களை அதிகமாகக் காணலாம். குறுந்தொகைச் செய்யுட்களையன்றி இவர் ஐங்குறு நூற்றில் நான்காம் நூறாகிய பாலைத் திணையைப் பாடியவர்.
ஓரம் போகியார் (10, 70,122, 127, 384): இவர் ஐங்குறு நூற்றில் மருதத்தைப் பொருளாக உடைய முதல் நூறு செய்யுட்களை இயற்றியவர். மருதத் திணையில் மிகவும் பயின்றவர். தமிழ் நாட்டு வேந்தர் மூவராலும் பிற உபகாரிகளாலும் நன்கு மதிக்கப் பெற்றவர். இவருடைய பாடல்களில் 106 மருதத் திணையின் வளத்தையே புலப்படுத்துவன. இவரால் பாடப்பட்டோர் சேரமான் ஆதனவினி, சோழன் கடுமான் கிள்ளி, மத்தி, விரான் என்னும் இவர்கள். இவர் பாடலில் வந்துள்ள ஊர்கள்: ஆமூர், இருப்பை, கழார், தேனூர் என்பன; நதிகள்: காவிரி, வையை என்பன; விழா: இந்திர விழா; நோன்பு; தைந் நீராடல், எட்டுத் தொகையில் இவர் இயற்றிய வேறு செய்யுட்கள் 5- (நற். 2; அகநா. 2; புறநா. 1)
ஓரிற்பிச்சையார் (277): அறிவர் பெறும் உணவை ‘ஓரிற் பிச்சை’ என்று குறித்தலின் இப்புலவர் இப்பெயர் உடையவர் ஆனார். ஓரிற் பிச்சையின் சிறப்பு மிகவும் பாராட்டற்பாலது. பெரியோர்கள் ஓரில்லைத் தாண்டிப் பிச்சை எடுப்பதில்லை.
ஓரேருழவனார் (131): வினைமுற்றி மீளும் தலைமகன் தலைமகளைக் காண்டற்கு விரையும் தன் நெஞ்சிற்கு ஈரச் செவ்வியில் விதை விதைத்தற் பொருட்டுக் கொல்லையை அடைதற்கு விரையும் ஓரேருழவனை உவமை கூறிய சிறப்பால் இவர் இப்பெயர் பெற்றனர்; இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. தம்முடைய செய்யுளில் இல்லறத்தை வெறுத்துக் கூறுதலின் இவர் துறவறத்தில் பற்றுடையவர் என்று கருத இடம் உண்டு. இவர் இயற்றிய வேறு செய்யுள் புறநா.193. இந்த 131-ஆம் செய்யுளின் ஆசிரியர் பெயருக்கு ‘நக்கீரர்’ என்னும் பிரதிபேதம் காணப் படுகிறது.
ஒளவையார் (15, 23, 28, 29, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388): இவர் அதியமான் நெடுமானஞ்சியிடம்