பொன்னாடு (உன் நாடு பொன் நாடு)” என்று கூறினார் என்றும் அதனால் மலைநாடு இதுகாறும் சிறப்புற்று விளங்குகிறது என்றும் ஒரு செய்தி வழங்குகிறது. தம்முடைய கூற்றாக அன்றிப் பாடியிரத்தற்குரிய விறலி முதலியவர்களின் கூற்றுக்களாகவும் இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் பிற நூல்களிலும் காணப்படும். ஆராய்வோர் அதனைக் கொண்டு இவரை விறலி முதலியவர்களாக நினைந்து விரைந்து முடிவு செய்து விடுதல் மரபன்று; அங்ஙனம் பாடுதல் கவிமதமெனக் கொள்ளுதல் முறை; பிற புலவர்கள் பாடல்களிலும் இம்முறை காணப்படும். தொகை நூல்களில் இவர் பெயர் ஒளவை எனவும் வழங்கும்.
கங்குல் வெள்ளத்தார் (387): இரவினைக் கண்டு தலைவி அஞ்சி, “கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே” என்று கூறியதாக அமைத்திருத்தலின் இவர் இவ்விசேடப் பெயரை அடைந்தார்.
கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் (213, 216): கச்சிப்பேடு என்பது காஞ்சீபுரத்தைச் சார்ந்த ஓர் ஊர். தலைவன் தலைவியின்பால் விருப்பம் உடையவனேனும் தன்னலம் பேணாது இல்லறம் புரியும் கடமையை நினைந்து அதற் குரிய பொருள் தேடச் செல்லுதலைத் தோழி கூற்றாகவும் தலைவி கூற்றாகவும் கூறியுள்ளார். செல்வத்தை இவர், “கேடில் விழுப்பொருள்” என்று குறித்துள்ளார். நன்னா கையார், இளந்தச்சனார், பெருந்தச்சனார் முதலிய புலவர் களும் கச்சிப் பேட்டினர் என்று தெரிகிறது.
கச்சிப் பேட்டு நன்னாகையார் (30, 172, 180, 192, 197, 287): இவர் பெண்பாற் புலவர். உண்மை போலத் தோன்றிப் பொய்யாக முடியும் கனவை, “வாய்த்தகைப் பொய்க்கனா” என்கிறார் இவர். யானையடியின் நகத்துக்குப் பேயின் பல்லை உவமை கூறுகிறார். களிற்றின் கூட்டத்துக்கு ஒரு யானை தலைமை பெற்று நிற்கும் என்பது, “இருங்களிற்றின நிரையேந்தல்” என்று இவர் குறித்திருப்பதனால் தெரிகிறது. மாதர் பன்னிரண்டு திங்கள் கருப்பம் தாங்குதலையும் கணவர் அகலச் சென்றிருக்கும் காலங்களில் மகளிர் கூந்தலில் மலரை அணியாமையையும் கூதிர்ப் பருவம் மகளிர்க்குக் கூற்றாதலையும் இவர் வாக்கால் அறியலாம்.
கடம்பனூர்ச் சாண்டிலியனார் (307): இப்பெயர் இவருக்கு ஊரினால் வந்த பெயர். சாண்டிலியர் என்பது ஒரு முனிவரது பெயர். பெரியோர்களின் பெயரை இடுவது பழைய காலத்திலும் வழக்கமாய் இருந்ததென்று தெரிகிறது. உடைந்த வளையை இவர் பிறைக்கு உவமையாகக் கூறியுள்ளார்.