குறுந்தொகை


cxxv


    கடியலூர் உருத்திரங் கண்ணனார் (352): கடியலூர் என்பது பாண்டி நாட்டில் உள்ள தோரூர்; திருநெல்வேலி ஜில்லாவில் உள்ளது. இவர் அந்தணர். பத்துப் பாட்டுள் பெரும் பாணாற்றுப் படையும் பட்டினப் பாலையும் இவரால் இயற்றப் பெற்றன. தொண்டைமான் இளந்திரையனும் சோழன் கரிகாற் பெருவளத்தானும் இவரை ஆதரித்தவர்கள். பட்டினப் பாலையைக் கேட்டு மகிழ்ந்து சோழன் கரிகாற் பெருவளத்தான் இவருக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசு அளித்தான் என்று தெரிகிறது. இவர் திருமாலிடம் அன்புடையவர். பல சாதியார்களுடைய ஒழுக்கங்களையும் அவர்கள் இருக்கும் குடியிருப்பினையும் சுவைபடத் தெரிவிக்கும் ஆற்றல் உடையவர். பழைய காலத்து வியாபார முறையைப் பற்றிய பல செய்திகளை இவர் வாக்கில் காணலாம். பாழ்பட்ட நாடுகளைப் பற்றி இவர் கூறும் பகுதி படிப்போர்க்குக் கழி பேரிரக்கத்தை உண்டாக்கும். பலா மரத்தைப் பறவைத் தொகுதிகள் விரும்பும் செய்தி குறுந்தொகையில் உள்ளது. எட்டுத் தொகையில் இவர் இயற்றியுள்ள வேறு செய்யுள் அகநானூற்றில் ஒன்று. இவருடைய வரலாற்றின் விரிவைப் பத்துப் பாட்டில் உள்ள பாடினோர் வரலாற்றில் காணலாம்.

    கடுகு பெருந்தேவனார் (255): தலைவன் தன்னுடைய கடமையை நிறைவேற்றும் பொருட்டுப் பொருள் முயற்சிக்கண் உள்ள பிணிப்பினால் இடங்கள் தோறும் செல்லுதலை இவர் வாக்கினால் அறியலாகும். கடுகு என்ற அடைமொழியின் காரணம் புலப்படவில்லை. கடுகு சந்தை என்னும் ஓர் ஊர் பாண்டி நாட்டில் உள்ளது.

    கடுந்தோட்கர வீரனார் (69): கரவீரம் என்பது சோழ நாட்டின் கண் திருவாரூருக்கு அருகில் உள்ள ஒரு சிவ ஸ்தலம். கரவீரன் - அலரி மாலையை அணிந்தவன். ஆண் குரங்கு இறந்ததாகப் பெண் குரங்கு கைம்மைத் துன்பத்துக்கு ஆற்றாமல், மரம் ஏறுதல் முதலிய தொழில் அறியாத சிறு குட்டியைச் சுற்றத்தினிடத்துச் சேர்த்தி ஓங்கிய மலைப் பக்கத்தில் தாவி உயிரை மாய்த்துக் கொள்வதாக இவர் கூறியுள்ளது படித்து இன்புறற்பாலது.

    கடுவன் மள்ளனார் (82): கடுவன்குடி என்ற பெயருள்ள ஊர்கள் சோழ நாட்டில் பல உண்டு. கடுவன் என்பது அவற்றுள் ஒன்றன் திரிபாக இருக்கலாம். இவர் கடுவன் என்ற ஊரினரென்று கொள்ள இடம் உண்டு. இவர் தந்தையார் புறநானூறு, 334-ஆம் செய்யுளை இயற்றிய மதுரைத் தமிழ்க் கூத்தனார்