என்று தெரிகிறது. ‘மள்ளனார்’ என்ற பெயரை நோக்கும் போது இவர் அரசியலில் துணை புரியும் படைத் தலைவராக இருக்கலாம் என்று ஊகிக்க இடம் உண்டு. நற்றிணையில் 150-ஆம் செய்யுள் இவர் பாடியது.
கண்ணனார் (244): தலைவனுக்குக் களிற்றையும், தலைவனை எதிர்ப்படப் பெறாத தலைவிக்கு வலையில் பட்ட மயிலையும் உவமையாக இவர் கூறியுள்ளார்.
கணக்காயன் தத்தனார் (304): தமிழ் அரிச்சுவடிக்குத் தமிழ்க் கணக்கென்றும் நெடுங்கணக்கு என்றும் பெயருண்டு. ஆயம் - கூட்டம். பிள்ளைகளைக் கூட்டமாகச் சேர்த்துத் தமிழ்க் கணக்கைக் கற்பிக்கும் உபாத்தியாயர் கணக்காயர் எனப்படுவார். இவர் ஆசிரியத் தொழிலுடைய தத்தனாராவர். சுறா வேட்டையை இவர் நன்கு கூறியுள்ளார்.
கந்தக்கண்ணனார் (94): பித்திகத்தின் அரும்பு உரிய பருவத்தின் முன்னும் சிவந்தது என்றும் அதனால் வருந்தேன் என்றும் தலைவி கூறுவதாக இவர் வாக்கில் உள்ளது வியக்கத் தக்கது.
கபிலர் (13, 18, 25, 38, 42, 87, 95, 100, 106, 115, 121, 142, 153, 187, 198, 208, 225, 241, 246, 249, 264, 288, 291, 312, 355, 357, 361, 385): இவர் வேறு, தொல்கபிலர் என்பவர் வேறு. இவர் அந்தணர். வேள்பாரியின் நண்பர். அவன் இறந்த பின்பு அவன் மகளிரை அழைத்துச் சென்று மணம் செய்து கொள்ளும்படி, விச்சிக்கோன், இருங்கோவேள் என்பவர்களை வேண்டி அவர்கள் மறுத்தமையால் வெறுத்துப் பின்பு அம்மகளிரைப் பார்ப்பார்ப் படுத்துத் தம் கடனைக் கழித்தனர். இவர் ஐங்குறுநூற்றில் குறிஞ்சியைப் பொருளாக உடைய மூன்றாம் நூறை இயற்றினர்; பதிற்றுப் பத்தில் ஏழாம் பத்தைப் பாடிச் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் நூறாயிரம் காணமும் அவன் ஒரு மலை மீதேறிக் கண்டு கொடுத்த நாடு ஒன்றும் பரிசிலாகப் பெற்றனர். எட்டுத் தொகையுள் நற்றிணையில் 20 பாட்டும், கலித் தொகையில் 29 பாட்டும், புறநானூற்றில் முப்பதும் இவர் இயற்றியன. அன்றியும் தமிழ் நாவலர் சரிதையில் கண்ட, “நெட்டிலையிருப்பை” என்னும் பாட்டும், பத்துப் பாட்டினுள் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டும், திருவள்ளுவ மாலையில் ஒரு செய்யுளும், இன்னா நாற்பதும் இவரால் பாடப்பட்டனவே. பன்னிரு பாட்டியலில் இவர் பெயரோடு சில சூத்திரங்கள் காணப்படுகின்றன. இவருடைய வாக்கில் விநாயகர், முருகக் கடவுள், சிவ பெருமான், பலதேவர், திருமால் இவர்களுடைய துதிகள் வந்துள்ளன. பெருங்