காவிரியின் வடகரையில் இப்பொழுது பாண்டூர் என வழங்கும் திருவன்னியூர் என்பதும், அதன் அருகில் உள்ள திருக்குறுக்கை வீரட்டம் என்பதும் மேலே கூறிய செய்திக்குத் தொடர்புடையன என்றும் கருத இடம் உண்டு. இவர் இயற்றிய வேறு செய்யுள்கள்: 19 (நற். 6; அகநா. 12; புறநா. 1)
கருவூர்க் கதப்பிள்ளை (64, 265, 380): இவர் பெயர் கருவூர்க் கந்தப் பிள்ளை என்றும் காணப்படுகிறது. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் இவருடைய மகனார் என்று கருத இடம் உண்டு. இவர்கள் இருவருடைய பாடல்களும் தொகை நூல்களில் காணப்படுகின்றன. இவரால் பாடப்பட்டோன் பாண்டியனுடைய வீரனும் கந்தன் என்னும் பெயரினனுமாகிய நாஞ்சில் வள்ளுவன் என்பான். இவர் பாடிய வேறு செய்யுள்: புறநா. 1.
கருவூர்கிழார் (170): தலைவனது நட்பில் தனக்குள்ள உறுதியைத் தலைவி கூறுவதாக உள்ள செய்யுள் ஒன்றே இவர் பெயரால் வழங்குகின்றது. யானைக்குக் கொறுக் காந்தட்டையினிடத்துள்ள விருப்பத்தை இவர் பாடல் புலப்படுத்துகிறது.
கருவூர்ச் சேரமான் சாத்தனார் (268): இவர் கருவூரார்; சேரர் மரபினர்; தோழி தலைவியை நோக்கி, “வந்து அடைந்தவர் பால் செல்கின்றீரோ வென்று செப்பலும் ஆற்றாம்; மீண்டும் வருவீரோ வென்று வினவலும் ஆற்றாம்; யாங்குச் செய்வாம்?” என்று கூறும் முகத்தால் வரைந்து கோடலே தக்கதென்று புலப்படுத்தியதாக இவர் ஒரு செய்யுள் பாடியுள்ளார்.
கருவூர்ப் பவுத்திரனார் (162): பவித்திரன் என்ற சொல் பவுத்திரன் என்று திரிந்தது போலும்; பவித்திரன் - தூய்மை உள்ளவன். பூதனார் என்ற சொல்லும் இப் பொருளிலேயே வரும் என்று அறிஞர் கூறுவர்.
கருவூரோத ஞானி (71): ஓத ஞானி - பரந்த ஞானி; வட சொற்றொடர். தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியதாக இவர் கூறும் ஒரு பாடலே இவர் புலமையை நன்கு தெரிவிக்கின்றது. 227-ஆம் செய்யுளை இயற்றிய ஓதஞானி வேறு; இவர் வேறு.
கல்பொரு சிறு நுரையார் (290): தலைவனைப் பிரிந்திருக்க மாட்டாத தலைவி அப்பிரிவினால் உண்டாகும் துன்ப மிகுதியைப் புலப்படுத்தி, ‘யாமெங் காதலர்க் காணே மாயிற்,