அதனை, ‘வெல்போர்ச் சோழர் கழாஅர்’ (நற். 281) என்பர். இவர் பனிக் காலத்தையே மிகுதியாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். (அகநா. 163, 217, 235, 294). கரும்பின் அரும்புக்குப் பசும்பாம்பின் சூல் உவமை ஆதலும், மழை மிகுதியினால் எள்ளுக்காய் உள்ளீடில்லாமல் போதலும் (35, 261) இவரால் காட்டப் பெற்றுள்ளன. வண்ணாத்தியின் செயலை இவர் அழகாகவும் சுருக்கமாகவும் உவமையாகக் காட்டியிருப்பது (330) பாராட்டற்கு உரியதாகும். எட்டுத் தொகையில் இவர் இயற்றிய வேறு செய்யுட்கள் 7 (நற். 2; அகநா. 5)
கள்ளிலாத்திரையனார் (293): கள்ளில் என்பது தொண்டை நாட்டின்கண் ஸ்ரீ ஞானசம்பந்தர் தேவாரம் பெற்ற ஒரு சிவஸ்தலம். ஆத்திரையனார் அத்திரி குலத்தில் பிறந்த ஓர் அந்தணர். ஆத்திரேய கோத்திரத்துப் புலவர் பிறரும் உண்டு; நற்.386. நன்றியறிவு முதலிய உத்தம குணத்தினர். இவரால் பாடப்பட்டோர் வேங்கட மலைக்குத் தலைவனாகிய ஆதனுங்கனும், ஆதியருமனும், உதியனும் ஆவர். இவர் செய்த வேறு பாடல்கள்: 2 (புறநா. 175, 389)
காக்கைபாடினியார் நச்செள்ளையார் (210): இவர் பெண் பாலார். ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் என்னும் அரசன் மீது பதிற்றுப் பத்துள் ஆறாம் பத்தைப் பாடி, அணி கலனுக்கு என்று ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசும் பரிசு பெற்றவர்; நச்செள்ளையார் என்பது இவரது இயற்பெயர் என்பதும், குறுந்தொகையில், “திண்டேர் நள்ளி கானத் தண்டர், பல்லா பயந்த நெய்யிற் றொண்டி, முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ, றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி, பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு, விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே” என்னும் பாட்டில் காக்கை கரைந்தமையைப் பாராட்டிக் கூறிய அருமை பற்றிக் காக்கைபாடினியார் என்ற சிறப்புப் பெயரைப் பிற்காலத்தில் ஆன்றோரால் இவர் பெற்றனர் என்பதும் தெரிகின்றது; பாடினி - பாடுபவள். செள்ளை என்பது பெண்பாலார்க்கு இயற் பெயராகப் பண்டைக் காலத்து வழங்கி வந்தது போலும். பதிற். 9-ஆம் பத்தின் பதிகத்தில் மையூர்கிழானுடைய மனைவியின் பெயர் அந்து வஞ்செள்ளை என்று வந்திருத்தல் காண்க. மறக்குடி மங்கையின் இயல்பை விளக்கி இவர் பாடிய, “படுமகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே” (278) என்னும் புறப்பாட்டும் அப்பாடல் ஒக்கூர் மாசாத்தி