குறுந்தொகை


cxxxi


யார் என்னும் பெண்பாலாருடைய பாக்களின் வரிசையில் சேர்க்கப் பெற்றிருத்தலும் இவர் பெண்பாலா ராதலை வலியுறுத்தும்; ‘கலனணிக’ என்று அரசன் பொற்காசு முதலியன கொடுத்தான் என்றது ஈண்டு அரியற்பாலது. ‘ந’ என்பது சிறப்புப் பொருளைத் தருவதோரிடைச் சொல்.

    காமஞ்சேர் குளத்தார் (4): துக்கக் கண்ணீர் வெம்மை உடையதாதல் பற்றி அதனை ‘இமை தீய்ப்பன்ன கண்ணீர்’ என்றும், பொறுத்தற்கரியது அஃது என்பது தோன்ற, ‘தாங்கி’ என்றும் இவர் குறித்த நயம் இன்புறத் தக்கது.

    காலெறி கடிகையார் (267): தலைவியின் எயிற்று நீரின் இனிமைக்குக் கரும்பின் காலெறி கடிகையின் சுவையை உவமையாக்கிச் சிறப்பித்தலின் இவர் இங்ஙனம் குறிக்கப் பெற்றார். “முடிகையினாற்றொடு மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின் கட்டிக், கடிகையினாலெறி காட்டுப் பள்ளி” (தே. திருஞா. கீழைத் திருக்காட்டுப் பள்ளி) என்பதிலும் இது வந்துள்ளது.

    காவன் முல்லைப்பூதனார் (104, 211): இவரது இயற்பெயர் பூதனார். காவன் முல்லை என்பது புறத்திணைத் துறைகளுள் ஒன்று. இவர் அத்துறையைப் பாடும் வல்லமை உடையார் போலும். பாலைத் திணையை மிகுதியாகக் கூறுகிறார். நல்கூர்ந்தோரின் நிலையும், மிகு பொருள் விரும்புவாருக்கு அருளில்லாமல் போதலும் இவரால் கூறப்படுகின்றன (அகநா. 151). பல்லி சோதிடம் கூறும் என்று கொண்டு, எட்டுத் தொகையில், ‘கணிவாய்ப் பல்லி’ என்கிறார். காட்டில் உதிரும் நெல்லிக்காயை வட்டக் கழங்காகக் கொண்டு செம்முக மந்தி ஆடுமென்றும் அதிரற்பூ வெருகின் எயிறு போலுமென்றும் கூறியுள்ளார். இவர் பாடிய வேறு செய்யுட்கள்: 6 (நற். 1; அகநா. 5)

    காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் (342): கந்தரத்தனார் என்ற பெயர் வேறு புலவர்க்கும் உண்டு. உரோடகத்துக் கந்தரத்தனார் என்ற புலவரின் பெயர் முன் வந்துள்ளது. அடையின்றிக் கந்தரத்தனார் என்ற பெயருடைய புலவர் செய்தனவாக நற்றிணையில் மூன்று பாடல்கள் (116, 146, 238) காணப்படுகின்றன. பலா மரத்தில் உள்ள பழங்களைக் குரங்குகள் கவரா வண்ணம் வலைகளை மாட்டும் வழக்கம் இவர் பாடலால் தெரிகிறது.

    காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (297): இப்பெயர் காரிக்கண்ணனார் எனவும் வழங்கும்; இவருக்கு இப்பெயர்