உவமை கூறுகின்றார் (152); திருமனைப் பல கடம் பூண்ட பெருமுது பெண்டிர் தலைவனைக் குறை கூறலாகாது (181) என்பதனை இவர் தலைவியின் கூற்றாக அமைத்துள்ளார்.
குட்டுவன் கண்ணனார் (179): குட்டுவன் - குட்ட நாட்டில் உள்ளவன். கண்ணன் என்பது இவரது இயற் பெயர். சேரருக்கே குட்டுவன் என்ற பெயர் உண்டு; ஆதலால் இவர் சேரர் மரபினரோ என்று கருதுவாரும் உளர். தலைவன் நாய்களோடு வருதலும், யானை மூங்கிலை விரும்பி உண்ணும் என்பதும் இவர் பாடலில் காணப்படுகின்றன.
குடவாயிற்கீரத்தனார் (281, 369): குடவாயில் என்பது சோழ நாட்டில் உள்ளதும் சோழர்களின் தலைநகராக இருந்ததும் தேவாரம் பெற்ற சிவ ஸ்தலமுமான ஓர் ஊர்; “தண்குட வாயிலன்னோள்”, “கொற்றச் சோழர் குடந்தை வைத்த, ‘’நாடுதரு நிதியினுஞ் செறிய, வருங்கடிப்படுக்குவள்” (அகநா. 44, 60), “தேர்வண் சோழர் குடந்தை வாயில்” (நற். 379) என்பவற்றால் அவ்வூரின் பெருமையை இவர் புலப்படுத்தி இருக்கின்றனர்; புலவர்கள் தம்மூர்ப் பெயர் முதலியவற்றை ஒரு வகையாகத் தம்முடைய பாடல்களில் தெரிவித்தல் மரபு; ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்த பின்பு அவனுடைய வண்மையைப் பாராட்டியும் இரவலர் வருந்துதலை ஒரு வகையாகப் புலப்படுத்தியும் இவர் பாடிய செய்யுள் படிப்பவர் உள்ளத்தை உருகச் செய்யும்; இன்னும் சேரனுடைய தொண்டி, பாண்டியரின் கூடல் நகர், கொற்கைத் துறை, சோழரின் உறையூர் என்பவை இவர் பாடலில் பாராட்டப் பெற்றிருத்தலின், மேற்கூறிய பெருஞ்சாத்தனை அன்றிச் சேரர் முதலிய முடி மன்னர் மூவராலும் நன்னனாலும் இவர் ஆதரிக்கப் பெற்றவர் என்று தெரிகின்றது; பெரும்பாலும் இவர் பாடல்களில் வந்துள்ளது பாலைத் திணை; எட்டுத் தொகையில் இவர் இயற்றிய வேறு பாடல்கள் - 15 (அகநா. 10; நற். 4; புறநா. 1)
குடவாயிற் கீரனக்கனார் (79): யானை ஓமை மரத்தின் தோலை உண்ணும் என்பதும், பாலை நிலத்தில் உள்ள புறா தன் பெடையைப் பயிர்வதும் இவர் பாவில் காணப்படும் செய்திகள்.
குப்பைக் கோழியார் (305): தலைமகள் தன் நோயைத் தீர்ப்பார் ஒருவரும் இன்றித் தான் வருந்துவதைப் பிறரால் ஏவப் படாமலும் இடையே விலக்கப்படாமலும் குப்பைக் கோழிகள் இரண்டு தம்மிற் பொருது அழிவதற்கு உவமையாகக் கூறியதனால் இவர் இப்பெயர் பெற்றார்.