குழற்றத்தனார் (242): தத்தன் என்பது இவருடைய இயற்பெயர். குழல் என்பது புல்லாங்குழலைக் குறிக்கும் சொல்லாக இருத்தல் கூடுமோ என்று தோன்றுகிறது. தலைவன் தலைவியுடன் இல்லறம் புரிதலைச் செவிலியின் கூற்றில் இவர் அமைத்திருப்பது படித்து இன்புறற் பாலது.
குறியிறையார் (394): குறியிறைப் புதல்வர் என்ற ஒரு தொடரைத் தம் செய்யுளில் அமைத்துப் பாடிய காரணத்தால் இவர் இப்பெயர் பெற்றார்.
குறுங்கீரனார் (382): உடலின் குறுமை பற்றி, குறுமுனி, குறு வழுதி என்பவற்றைப் போல இவர் இப்பெயர் பெற்றார் போலும். காலமல்லாத காலத்தில் பெய்யும் மழைக்கு முல்லையும் தளவும் மலர்ந்தன என்று தோழி கூறுவதாக இவர் செய்யுளில் அமைத்துள்ளார்.
குறுங்குடி மருதனார் (344): மருதனார் என்பது இவரது இயற்பெயர். குறுங்குடியாகிய பாண்டி நாட்டு விஷ்ணு ஸ்தலம் இவருடைய ஊர். அகநா. 4 இவர் செய்தது. இவ்விரு பாடல்களிலும் முல்லையையே வருணிக்கிறார். “தாதுண் பறவை பேதுற லஞ்சி, மணிநா வார்த்த மாண்வினைத் தேரன்” (அகநா. 4) என்று தலைவனது அருளை இவர் குறிப்பிக்கிறார். மாலையில் வீடு திரும்பும் தாய்ப் பசுவின் வருணனை படித்து இன்புறற்பாலது.
குன்றியனார் (50, 51, 117, 238, 301, 336): வரைவு மலிவுக்கு இவர் கூறும் காரணங்கள் சிறந்தனவாக உள்ளன; 51. தலைவனது மணிகள் கட்டிய தேர் வாராதாயினும் வருவது போலத் தன் செவிகளில் இசைக்கும் என்று தலைவி கூறுவதாக இவர் குறிப்பிடுகிறார் (301). இவர் கூறும் மாலை வருணனை (நற்.117) சுவைபட அமைந்துள்ளது. இவர் மேலைக் கடற்கரை நகரமாகிய தொண்டி என்ற ஊரை வருணிக்கிறார்; 238. களவு, கற்பாகிய இருவகை ஒழுக்கங்களையும் நெய்தல் திணையால் அமைத்துப் பலவாறு பாராட்டி உள்ளார். எட்டுத் தொகையில் இவர் இயற்றியுள்ள வேறு செய்யுட்கள்: 4 (நற். 2; அகநா. 2)
கூடலூர் கிழார் (166, 167, 214): இவர் மலைநாட்டின் கண்ணதாகிய கூடலூரை இருப்பிடமாக உடையவர்; வேளாண் மரபினர்; இவருடைய பாடல்கள் இன்சுவையைத் தருபவை; ஒரு விண்மீன் வீழ்ச்சியைக் கண்டு கோச் சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை என்னும் அரசன் இன்ன நாளில் இறப்பான் என்று முதலில்