குறுந்தொகை


cxxxv


நிச்சயித்திருந்து அவ்வாறே அவன் இறந்தது கண்டு ஒருவாற்றானும் பிரிவாற்றாது வருந்தினார் என்று, “ஆடியலழற் குட்டத்து” (புறநா. 229) என்னும் பாடலாலும் அதன் பின்னுள்ள வாக்கியங்களாலும் தெரிதலால், இவர் கணிதத்திலும் வல்லவராகக் கருதப்படுகிறார்; இவர் மேற்கூறிய அரசனால் மிகவும் ஆதரிக்கப் பெற்றவர்; அவன் வேண்டுகோளால் ஐங்குறுநூறு என்னும் தொகை நூலைத் தொகுத்தவர் இவரே; ஐங்குறு நூற்றின் இறுதி வாக்கியத்தில் ‘புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்’ என்று ஆன்றோரால் சிறப்பித்துக் கூறப் பெற்றிருத்தலின், இவருடைய பெரும்புலமை நன்கு வெளியாகின்றது; இவர் காலத்துப் புலவர்கள் குறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார் என்பவர்கள். இவர் இயற்றிய வேறு பாடல் புறநானூற்றில் ஒன்று உள்ளது.

    கூவன் மைந்தனார் (224): இராக் காலத்தில் கிணற்றில் விழுந்து விட்ட பசுவின் துயரைக் கண்டு அதனைப் பிறருக்குச் சொல்லும் வல்லமையில்லாத ஊமனைத் தன் துயரைப் பிறருக்குச் சொல்லும் வலியின்றி வருந்தும் கிழத்திக்கு உவமை கூறியுள்ளார். இங்கே, “கூவற் குராலான் படு துயர்” என்ற தொடரினால் இவர் கூவன் மைந்தன் என்று பெயர் பெற்றார் என்பர்.

    கொல்லன் அழிசி (27, 138, 145, 240): கொல்லன் என்பது சாதி பற்றிய பெயர். இவரது இயற்பெயர் அழிசி என்பது. மதுரைக் கொல்லன் புல்லன், மதுரைப் பெருங் கொல்லன் என்று இவ் வகுப்பாரில் வேறு புலவரும் இத் தொகை நூலில் பாடியுள்ளார்கள். இவர் சார்த்துவகையால் நன்னனது ஏழிற் குன்றத்தைக் கூறியிருப்பதனால் (138) அவன் காலத்தவராகக் கருதப்படுகிறார். ஏழிற் குன்றத்தில் மயில்கள் உள்ளன என்று இவர் கூறியவாறே ‘நன்ன னேழி னெடுவரைப் பாழிச் சிலம்பிற் களிமயில்’ (அகநா. 152) என்று பிறரும் கூறியுள்ளார். இருளில் மலை மறைவதற்குக் கடலில் கலம் ஆழ்வதை இவர் உவமை கூறியிருத்தல் (145) பாராட்டற்பாலது. அழிசி என்னும் பெயர் அழுசி என்றும் வழங்குகிறது.

    கொல்லிக் கண்ணனார் (34): கொல்லி மலையைச் சார்ந்தவர் இவர். குட்டுவன் சேரனுடைய மரந்தை நகரை இவர் கூறுவதனால் அவன் காலத்தவராகக் கருதப்படுகிறார். ‘இரங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பெரும’ (பதிற். 90: 28) என்ற அடியை நோக்கும்போது மரந்தை என்பதே ஏற்புடைத்தாகத் தோற்றுகின்றது.