குறுந்தொகை


cxxxix


பாடியுள்ளார். தலைவி, “இருவேமாகிய உலகத், தொருவேமாகிய புன்மை நாமுயற்கு உடனுயிர் போகுக” (57) என்பதும், “கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலன்” (300) என்று தலைவன் தலைவிக்கு உறுதி கூறுவதும் தலைவன் தலைவியரில் ஒருவர்பால் மற்றொருவர் வைத்துள்ள அன்பைப் புலப்படுத்துவனவாகும். தலைவி தோழியின் வழி ஒழுகுவாள் என்பதை, “தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும், கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும், புணைகை விட்டுப் புனலோ டொழுகின், ஆண்டும் வருகுவள்போலும்” (222) என்பதனால் இவர் புலப்படுத்தி இருக்கும் நயம் படித்தின்புறற் பாலதாகும். இந்நூலில் அன்றி, நற்றிணையில் ஒரு செய்யுள் இவர் செய்தது.

    செம்புலப் பெயனீரார் (40): நொது மலராக இருந்த தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டு உள்ளப் புணர்ச்சியுற்றதை, செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே” என்று உவமை வாயிலாக வெளியிட்ட சிறப்புப் பற்றி இவர் இப்பெயர் பெற்றார்.

    செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தனார் (228): அரசாங்கத்துச் செய்தியைத் தெரிவிக்கும் கருமத் தலைவர்கள் வள்ளுவர் எனப்படுவர். இக் காலத்தில் சோதிடம் கூறுவோர் வள்ளுவர் எனப் பெறுவர். தாழை மலர் குருகுகள் கோதுகின்ற சிறகைப் போல மடல் விரியும் என்று ஒரே நிலப் பொருளாதல் பற்றித் தாழைக்குக் குருகினை இவர் உவமை கூறியது அழகாக அமைந்துள்ளது.

    செல்லூர்க் கொற்றனார் (363): இவர் செல்லூர் என்னும் ஊரினர். குறிஞ்சியும் முல்லையும் மயங்கிய பாலைத் திணையைப் பற்றிய ஒரு செய்யுளே இவர் பாடியது.

    சேந்தம் பூதனார் (247): சேந்தனுடைய மகனார் சேந்தம் பூதனார் எனப்படுவர். சேந்தங் கண்ணனார், சேந்தன் கீரனார், சேந்தன் கூத்தனார், சேந்தங் கொற்றனார் என்ற பெயர்களை உடைய வேறு சங்கப் புலவர்களும் உண்டு. “திறவோர் செய்வினை அறவதாகும்” என்பதனால் பெரியோரிடத்து இவருக்குள்ள நல்ல எண்ணம் புலனாகின்றது. மலைப் பாம்பு யானையைப் புரட்டுவதாக (நற். 261) நெறியின் தன்மையை இவர் ஓரிடத்தில் புலப்படுத்தி உள்ளார். இவர் பெரும்பாலும் குறிஞ்சியையும், நெய்தலையும், முல்லையையும் புனைந்து பாடியுள்ளார்.