அடிகளில் இவர் பாடியுள்ள செய்யுள் பலகால் படித்து இன்புறற்பாலது.
தீன்மிதி நாகனார் (111): இவர் பெயர் தீன்மதி நாகனார் என்றும், தீமிதி நாகனார் என்றும் காணப்படுகிறது. “தலைவியின் வேறுபாட்டிற்குள்ள காரணத்தை அன்னை இயல்பாக அறிதல் கூடும்; அங்ஙனம் அறிந்து கொள்ளாது வேலன் கூற்றை நம்புவாளாயின் இல்லவரின் பெரு நகையைக் காணத் தலைவன் இங்கே வருக” என்ற கருத்தைத் தோழி கூறுவதாக இவர் பாடல் அமைந்துள்ளது.
தும்பிசேர் கீரனார் (61, 316, 320, 392): கீரனார் என்பது இவரது இயற்பெயர். “கொடியை வாழிதும்பி ... மெய்யே கருமை யன்றியுஞ் செவ்வன், அறிவுங்கரிதோ வறனிலோய் நினக்கே ... பசலை யூதாய் ... அன்பிலர் வெம்மலை யருஞ்சுரமிறந்தோர்க் கென்னிலையுரையாய் சென்றவன் வரவே” (நற். 277) என்றும் , “அம்ம வாழியோ வணிச்சிறைத் தும்பி, ... யவர்நாட், டண்ண னெடுவரைச் சேறியாயிற் ... களைஞர்தங்கை தமரிற்றீரா ளென்மோ ... கிழவோர்க்கே” (குறுந். 392) என்றும் வண்டினை நோக்கி இரண்டு இடங்களில் தலைவி தோழிகளின் கூற்றாக இவர் கூறி இருத்தலினால் ‘தும்பி சேர்’என்ற அடைமொழி பெற்றார் போலும். கணவன் இறந்துபட மனைவி கைம்மை அடைந்து வருந்திய நிலையைக் கண்டார் நிலையாமை கூறி இரங்கியதாக இவர் பாடிய பாட்டு (புறநா. 249) இவர்தம் புலமைக்கு ஒரு சான்றாகும். சிறு குழந்தைகள் தச்சன் செய்த சிறிய வண்டிகளை ஈர்த்து இன்புறும் வழக்கம் இவரால் கூறப்பட்டுள்ளது (குறுந். 61). இவர் பாடிய வேறு செய்யுட்கள:் நற். 277; புறநா. 249.
தூங்கலோரியார் (151, 295): அகநானூற்றில், “வருநர் வரையாப் பெருநாளிருக்கைத் தூங்கல் பாடிய வோங்குபெரு நல்லிசைப், பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்” (227) என்று நக்கீரனார் கூறி இருக்கும் பகுதியில் காணப்படும் தூங்கல் என்ற சொல் இப்புலவரையே குறிக்கும் என்பர். அங்ஙனமாயின் இவர் ஊணூருக்குத் தலைவனாகிய தழும்பன் என்ற உபகாரியைப் பாடியிருத்தல் கூடும் என்று தெரிகிறது. அப்பாட்டு இப்பொழுது கிடைத்திலது. செல்வக் குறைபாடுள்ள ஒருவனது வாழ்க்கையை இவர், “ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை” என்று குறித்துள்ளார் (295). ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக் கொண்டு வாழும் வாழ்க்கை செல்வச் சிறப்பில்லாதது என்பது இதன்