கருத்து. இச் செய்யுளிலேயே தலைவனது நல்குரவு பற்றி இவர் தலைவியைச் சிறப்பித்திருப்பது அழகாக அமைந்துள்ளது. “மறப்பருங் காதலி யொழிய, இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே” என்று புணர்ப்பினாலேயே இளமைக்கு இன்பம் உண்டாதலை இவர் குறிக்கின்றார் (151). நற். 60-ஆம் பாடலும் இவர் பாடியதே.
தேரதரனார் (195): இவர் பெயர் தாமோதரன் என்றும் காணப்படுகிறது. பிரிவிடைப் பருவ வரவின்கட் கிழத்தி மெலிந்து கூறுவதாக இவர் கூறும் செய்யுளில் வாடையை, “தைவரலசைவளி” என்று குறிப்பித்து அது மெய்பாய்ந் துறுதரத் தலைவியின் மெய் பிறிதாவதாகக் கூறிய நயம் கூர்ந்து நோக்கத்தக்கது.
தேவகுலத்தார் (3): தேவகுலம் - தேவாலயம்; தேவாலயத்தினர் என்பது இத்தொடரின் பொருள். “நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று, நீரினு மாரளவின்றே ... நாடனொடு நட்பே” என்று தலைவி கிழவோன் மாட்டுத் தனக்கமைந்துள்ள பெருமையிற்றிரியாத அன்பைப் புலப்படுத்துவதாக இவர் பாடிய செய்யுள் பலமுறை படித்தின்புறற் பாலதாகும்.
தொல் கபிலர் (14): குறிஞ்சிப் பாட்டைப் பாடிய கபிலரினும் இவர் வேறுபட்டவர். குறிஞ்சித் திணையைப் பலபடியாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். பல உள்ளுறை உவமங்களை அடுக்கி உள்ளார். இவர் இயற்றிய வேறு பாடல்கள்: நற். 114, 276, 328, 399; அகநா. 12, 282.
நக்கீரனார்(78, 105, 143, 161, 266, 280, 368): இவருடைய ஊர் மதுரை; மதுரைக் கணக்காயனார் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் அந்தணர். இவரது இயற்பெயர் கீரனார். ‘ந’ என்பது சிறப்புப் பொருளைத் தருவதோர் இடைச் சொல். கடைச்சங்க காலத்தில் சங்கப் பலகையில் முதல் இடத்தை முதலில் ஏற்றவர் இவரே; கீரங்கொற்றனாருடைய தந்தையார்; பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்குச் சிவபிரான், பலதேவர், மாயோன், முருகவேள் என்பவர்களை உவமையாக்கி இவர் பாடிய பூவை நிலையும் (புறநா. 56) பொதுவாகப் பாடிய பொருண்மொழிக் காஞ்சியும் (புறநா. 189) மிக்க அழகு வாய்ந்தவை. திருமுருகாற்றுப் படையும், நெடுநல்வாடையும் இவர் இயற்றிய நூல்கள். நக்கீரர் நாலடி நாற்பது என்னும் நூல் ஒன்று இவர் இயற்றியதாக யாப்பருங்கல விருத்தி முதலியவற்றால் தெரிகின்றது. இறையனாரகப் பொருளுக்கு