முதல் உரை கண்டவர் இவரே. இவர் செய்தனவாகச் சில தனிப்பாடல்கள் வழங்குகின்றன. இவர் இயற்றியதாகத் திருக்காளத்தி ஞானப் பூங்கோதை ஸகஸ்ரநாமம் ஒன்று தஞ்சாவூர் அரண்மனைப் புத்தகசாலையில் உள்ளதென்பர். அதனால், இவர் வட மொழியிலும் பயிற்சி உள்ளவர் என்று தெரிகின்றது. இவருடைய மாணாக்கர் இவர் புதல்வரான கொற்றனார் என்பவரே. இன்னும் 11- ஆம் திருமுறையில் காணப்படும் கைலைபாதி காளத்திபாதியந்தாதி முதலிய 10- பிரபந்தங்களின் ஆசிரியரும் இவரே என்பாரும் உளர். மதுரைப் பட்டி மண்டபம் (வித்தியா மண்டபம்) புகுந்து வடமொழியே சிறப்புடையது என்றும் தென்மொழி இழிந்தது என்றும் கூறிய குயக்கொண்டான் என்பவனை இறக்கப் பாடி, சிலர் வேண்ட அவன் பிழைக்கவும் பாடிய ஆற்றல் வாய்ந்தவர். இவருடைய வரலாறு இவர் இயற்றிய பிரபந்தங்களாலும், தனிப் பாடல்களாலும், திருப்புகழாலும், கல்லாடம் முதலியவற்றாலும், தொல்காப்பிய உரைகளாலும், இறையனாரகப் பொருளுரையாலும், திருவாலவாயுடையார் திருவிளையாடல்புராணம், திருவிளையாடல், திருப்பரங்கிரிப் புராணம், சீகாளத்திப் புராணம் முதலியவற்றாலும் நன்கு விளங்கும். இவருடைய திருவுருவம் திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ முத்துக்குமாரக் கடவுளின் பக்கத்தே எழுந்தருளி இருக்கின்றது; திருவிழாக் காலத்தில் அதற்குப் புறப்பாடு உண்டு. மதுரை மேலைமாசி வீதியின் மேல் சிறகில் நக்கீரர் கோயில் என்று ஒரு கோயில் பெரிதாக உள்ளது; அது சங்கத்தார் கோயில் எனவும் வழங்கும். ஈங்கோய் மலை என்னும் சிவ ஸ்தலத்தில் பண்டைக் காலத்தில் ஓர் அரசர் நக்கீரர் திரு உருவத்தைப் பிரதிஷ்டை செய்து நிவந்தங்கள் அமைத்தனர் என்று அத் தலத்தில் உள்ள ஒரு சாஸனம் தெரிவிக்கிறது. நக்கீரரால் பிரதிஷ்டை செய்யப் பெற்றதாகக் கருதப்படும் ஒரு சிவலிங்கப் பெருமான் நக்கீர நாதர் அல்லது நக்கீர லிங்கம் என்னும் திருநாமத்தோடு திருக்காளத்தியில் எழுந்தருளி இருக்கின்றனர். குறுந்தொகைச் செய்யுட்களையன்றி எட்டுத்தொகையில் இவர் இயற்றி உள்ள செய்யுட்கள்- 26 (நற். 7; அகநா. 17; புறநா. 2). திருவள்ளுவ மாலையில் இவர் செய்யுள் ஒன்று உள்ளது. இவரது விரிவான வரலாற்றைப் பத்துப் பாட்டின் பாடினோர் வரலாற்றில் காணலாம்.
நம்பி குட்டுவர் (109, 243): இவர் சேரர் பரம்பரையினர் என்பது குட்டுவன் என்ற சொல்லால் விளங்கும். நம்பி என்ற சிறப்புப் பெயர் ‘நம்பி நெடுஞ்செழியன்’ (புறநா. 239)