என்பது போல அடைமொழியாக வந்தது. தலைவனது மலையில் பட்டு வரும் காற்றுத் தன்மீது படுவதனால் தன் காம வெப்பம் தணியும் என்று தலைவி கூறுவதாக (நற். 236) இவர் பாடி உள்ளார். சேதாம்பல் சிறிது நெகிழ்வதற்குச் சிறு வெண் காக்கை வாய் திறப்பதை உவமை கூறியுள்ளார் (நற். 345). தலைவனை உள்ளுவதனால் கண் துயிலாமையைத் தலைவி, “ சேர்ப்பனை, உள்ளேன் றோழி படீஇயரென் கண்ணே” (243) என்று வேறு விதமாகக் கூறுவதாக இவர் பாடியிருத்தல் நோக்கத் தக்கது. இவர் பாடியனவாக இப்பொழுது கிடைத்துள்ள வேறு செய்யுட்கள்: நற்றிணையில் மூன்று.
நரி வெரூஉத்தலையார் (5, 236): இவர் யாது காரணத்தாலோ தம் உடம்பு வேறுபட்டிருந்து சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும் பொறையைக் கண்ட நாளில் அவ்வேறுபாடு நீங்கித் தம் உடம்பு பெற்றனர். இது “புதுமை பெருமை” (தொல். மெய்ப். சூ. 7, பேர்) என்பதன் விசேட உரையால் விளங்கும். இவரால் பாடப் பட்டோன் மேற்கூறிய கோப் பெருஞ் சேரலிரும்பொறை. இவர் இயற்றிய வேறு பாடல்கள்-3 (புறநா. 2; திருவள்ளுவ மாலை-1)
நன்னாகையார் (118, 325): இவர் ஒரு பெண்பாற் புலவர். மாலையில் கதவடைப்போர், “வருவீர் உளீரோ” என்று கூப்பிடுதல் வழக்கம் என்பது இவர் பாட்டால் தெரிகிறது (118). பெண்பாலாராகிய இப்புலவர் தலைவி கூற்றாகவே இந்த இரண்டு செய்யுட்களையும் அமைத்துள்ளார்.
நாகம் போத்தனார் (282): நாகனுடைய மகன் போத்தன் என்பது இத் தொடரின் பொருள்; நாகன் என்பதன் ஈற்றில் உள்ள அன் கெட்டு அம்முச் சாரியை வந்தது (தொல். எழுத்து. சூ. 350). போத்தன் என்ற பெயர் மக்களுக்கு உண்டு என்பது, ‘போத்தனூர்’ என்ற பெயர் வழக்கால் அறியலாகும். வரகு செம்மண்ணை உடைய முல்லை நிலத்தில் கார் காலத்தில் வளம் பெறுவது என்று இவர் குறித்துள்ளார்.
நாமலார் மகன் இளங்கண்ணர் (250): மாலைக் காலத்தில் கலைமான் தன் பிணையோடு பள்ளங்களிலே தங்கிய நீரை மாந்தித் துள்ளி விளையாடும் என்று இவர் தம் செய்யுளில் கூறியுள்ளார்.
நெடும் பல்லியத்தனார் (203): பல்லியம் என்பது பல வாத்தியங்களைக் குறிக்கும். நெடிய பல வாத்தியங்களை உடைமையின்