குறுந்தொகை


cxlv


இவருக்கு இப்பெயர் வந்தது. இப் பெயருக்கு ஏற்ப இவர், “நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச,் செல்லா மோதில் சில்வளை விறலி” என்று கூறியிருப்பது நோக்கத் தகுந்தது (புறநா. 64). தலைவனது தூய தன்மையினால் பரத்தைமை உடைய தலைவன் நீங்கி ஒழுகுவதற்கு முனிவரது தூய்மையைக் கண்டு தூய்மை இல்லாதார் அஞ்சி விலகி ஒழுகுவதை இவர் உவமையாகக் கூறியுள்ளார். இவர் பாடிய வேறு செய்யுள்: புறநா. 64.

    நெடும்பல்லியத்தை (178): இவர் ஒரு பெண்பால் புலவர். இவர் நெடும்பல்லியத்தனாரின் உடன் பிறந்தோரோ என்று ஊகிக்கப்படுகிறார். தலைவி, தலைவனுக்குக் களவுக் காலத்தில் அரியளா இருத்தற்கு, மூன்றாம் பிறை, கண்டு தொழுவோர்க்கு அரிதாய் இருத்தலை உவமை கூறியுள்ளார்.

    நெடுவெண் ணிலவினார் (47): களவுக் காலத்தில் இரவுக் குறிக் கண் வரும் தலைவனுக்கு இடையூறாக இருக்கும் நிலவை, “நெடுவெண்ணிலவே” என்று விளித்துத் தோழி வெறுப்புக் குறிப்புப் படக் கூறுவதாகச் செய்யுள் பாடியதால் இவர் இப் பெயரைப் பெற்றார்.

    நெய்தற் கார்க்கியர் (55, 212): கார்க்கியர் என்பது ஒரு முனிவரின் பெயர்; அதுவே இவரது இயற்பெயராகும். நெய்தல் திணையைப் பாடும் ஆற்றல் வாய்ந்தமையின் இவர் நெய்தல் கார்க்கியர் என்ற பெயரைப் பெற்றார். நெய்தல் நிலத்தில் கழியில் உள்ள நிலப் பூக்கள் கூம்புவதும், கடல் திவலை வீச ஊதைக் காற்றுத் துன்பத்தை உண்டாக்குவதும், தலைவன் மணி ஒலிக்கத் தேரில் ஏறிக் கடற்கரை வழியாக வருவதும் இவர் பாடல்கள் இரண்டிலும் சொல்லப்படுகின்றன.

    படுமரத்து மோசிகீரனார் (33, 75, 383): படுமரத்து மோசி கொற்றனாரும் இவரும் சகோதரர்களாக இருக்கலாம் என்று தோற்றுகிறது. படுமரம் என்ற சொல் இந்நூற் பிரதிகளில் சில இடங்களில் ‘படுமாற்றூர்’ என்றும் காணப்படுகிறது. இவரும், ‘மோசிகீரனார்’ என்று இந்நூலுள் (59, 84) வந்துள்ள பெயருக்குரியாரும் ஒருவரே என்று கருத இடமுண்டு. மாணாக்கர் மன்றத்தில் இருப்பவர் என்றும் அவர்கள் இரந்தூண் வாழ்க்கையர் என்றும் இவர் கூறுகிறார் (33). மௌரியரின் தலைநகராகிய பாடலிபுரத்தின் செல்வ மிகுதியையும் அங்கே இருந்த யானைகளின் பெருக்கையும் இவர் குறித்துள்ளார்.