குறுந்தொகை


cxlvi


    படுமரத்து மோசிகொற்றனார் (376): இவர் பாடியுள்ள 376-ஆம் கவியை அடுத்துள்ள பாடல் மோசி கொற்றனார் பாடியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இரண்டு கவிகளும் சேர்ந்தாற்போல் இருத்தலினால் இந்த இரண்டு பெயர்களும் ஒருவரையே குறித்தல் கூடுமோ என்று நினைக்க இடம் உண்டு.

    பதடி வைகலார் (323): தலைவியோடு பழகாத நாளைப் பதடி வைகல் என்று சொல்லுதலின் இவர் இப்பெயர் பெற்றார்(பதடி -பதர்).

    பதுமனார் (6): தலைவன் பிரிந்த இடத்து இரவில் துயில் கொள்ளாத தலைவி தோழியின் துயிலையும் கெடுத்து இவள் தூங்குவதை, “நனந்தலை யுலகமுந் துஞ்சும்” என்று இவர் கூறுவது நயம்பட அமைந்துள்ளது. பதுமனார் என்ற பெயர் சைனரைக் குறிக்கும் என்பாரும் உளர். இவர் வேறு; பெரும்பதுமனார் வேறு.

    பரணர் (19, 24, 36, 60, 73, 89, 120, 128, 165, 199, 258, 259, 292, 298, 328, 393, 399): இவர் கபிலர்பால் மிக்க நேயம் உடையவர். இது கபில பரணர் என்னும் தொடரால் விளங்கும். இவர் பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்துப் பாடிக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றனர்; இதனை மேற்கூறிய பகுதியின் இறுதிக் கட்டுரையால் உணரலாம். இவரால் பாடப்பட்டோர்: சோழன் உருவப்பஃறே ரிளஞ்சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற் கிள்ளி, வையாவிக் கோப்பெரும்பேகன், சேரமான் கடல் ஓட்டிய வேல்கெழு குட்டுவன் என்பார். “அமரர்ப் பேணியும்” என்னும் ஒளவையாருடைய பாட்டினால், அதியமான் நெடுமானஞ்சியை இவர் புகழ்ந்திருப்பதாகத் தெரிகின்றது. திருவள்ளுவ மாலையில் உள்ள ‘மாலுங்குறளாய்’ என்னும் அரிய வெண்பா இவர் பெயரால் உள்ளது. இன்னும் இவர் இயற்றிய பாடல்கள் நற்றிணையிலும்,புறநானூற்றிலும் உண்டு; 11-ஆம் திருமுறையில் உள்ளதான சிவபெருமான் திருவந்தாதி என்னும் பிரபந்தத்தின் ஆசிரியராகியப் பரணதேவ நாயனார் என்பவர் இவர் என்று சொல்லுவர். இவர் வேறு; வன்பரணர் வேறு. இரண்டு திருவிளையாடல் புராணங்களிலும் இவர் புகழப்பட்டிருக்கின்றார். பதிற்றுப் பத்திலும் இந்நூலிலும் அன்றி இவர் எட்டுத் தொகையில் இயற்றியனவாக உள்ள