குறிக்கப்படுபவன் இவனோ வேறோ என்பது தெரியவில்லை. வினை முற்றிப் புகுந்த தலைமகன் செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு தலைவியினிடம் இருத்தலைக் கூறி மேகத்தை, “இனி நீ முரசின் முழங்கி இடித்திடித்துப் பெய்து வாழி” என்று கூறுவதாக ஒரு பாடல் இவரால் பாடப்பட்டுள்ளது.
பாண்டியனேனாதி நெடுங் கண்ணர் (156): ஏனாதி என்பது வேந்தனால் கொடுக்கப்படும் பட்டப் பெயர்களுள் ஒன்று. சேனாதிபதிகட்கு வழங்கும் பட்டம் இது. பாண்டியனுடைய சேனைத் தலைவருள் இவர் ஒருவர் ஆவர். சேனைத் தலைவர் என்பதற்கு ஏற்பப் போரின் காரணமாக அழிந்துபட்ட மன்றமும் பொதியிலும் இவர் வாக்கில் கூறப்படுகின்றன. தன்னைப் பிரிந்து தலைவி உறக்கம் கொள்ளாமல் தவிப்பாளோ என்று நினைக்கும் தலைவன் கூற்றில், “வென்வேல், அண்ணல் யானை யடுபோர் வேந்தர், ஒருங்ககப் படுத்த முரவுவாய் ஞாயில், ஓரெயின் மன்னன் போலத், துயிறுறந் தனள்கொ லளிய டானே” (அகநா. 373) என்பதை அமைத்துள்ளமையும் நோக்கத்தக்கது. பார்ப்பனப் பாங்கன் தண்டினையும் கமண்டலத்தையும் வைத்திருப்பான் என்றும் வேதம் பயின்றவன் என்றும் இவர் வாக்கினால் (156) தெரிகிறது. இவ்விரண்டு செய்யுட்களே இவர் பாடியவை.
பாரகாபரர் (254): இலைகள் இல்லாத கிளைகளில் கோங்கு மலர் தலையும், தலைவன் தன் வருகையைக் குறித்து முன்னதாகத் தூது விடுதலையும் இவர் பாடல் குறிக்கின்றது.
பாரதம் பாடிய பெருந்தேவனார்: இவர் தொண்டை நாட்டினர்; தமிழில் பாரத கதையை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றிய ஆசிரியர். அந்நூல் செய்யுட்கள் தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சினார்க்கினியத்திலும் யாப்பருங்கல விருத்தி முதலியவற்றிலும் மேற்கோளாகக் காணப்படும். இவர் கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவருடைய கடவுள் வாழ்த்துக்கள் ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் ஐந்து தொகை நூல்களில் உள்ளன. முதல் மூன்றிலும் உள்ளவை சிவபெருமான் துதிகளாகவும், நற்றிணையில் உள்ளது திருமால் துதியாகவும், குறுந்தொகையில் உள்ளது முருகக் கடவுள் துதியாகவும் உள்ளன. நற்றிணை முதலிய தொகை நூல்களில் இவருடைய கடவுள் வாழ்த்துக்கள் முதலில் வைக்கப் பெற்றிருத்தலும் ஐந்தாம் மறையாகிய