யார்கண்ணுமிகந்துசெய் திசைகெட்டா னிறுதிபோல், வேரொடு மரம் வெம்ப” (கலித். 10) என்று கூறும் முகத்தால் பல நீதிகளை அமைக்கிறார். நீதிகளை இவர் உவமை வாயிலாக விளக்குவதற்கு, “சிறப்புச்செய் துழையராய்ப் புகழ்போற்றி மற்றவர், புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்பு போல்”, “செல்வத்துட் சேர்ந்தவர் வளனுண்டு மற்றவர், ஒல்கிடத் துலப்பிலா வுணர்விலார் தொடர்புபோல்”, “பொருந்திய கேண்மையின் மறையுணர்ந் தம்மறை, பிரிந்தக்காற் பிறர்க்குரைக்கும் பீடிலார் தொடர்பு போல்” (கலித். 25) என்பன உதாரணமாகும். புறநானூற்றில் ஒரு வீரனது ஆற்றலை இவர் பாடியிருக்கும் விதம் படித்து இன்புறற்பாலது (282). இவரைப் பாடியவர் பேய் மகள் இளவெயினி என்பார் (புறநா.11). இவர் இயற்றிய வேறு பாடல்கள்: நற். 10; பாலைக் கலி; அகநா. 12; புறநா. 1.
பூங்கண்ணர் (253): சுரத்தில் செல்வோர் இரவில் புலி தனக்குரிய இரையை வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கல் குகையினிடத்துத் தங்குவர் என்று இவர் கூறியுள்ளார்.
பூங்கணுத்திரையார் (48, 171); இவர் பெண்பாலார்: உத்திரையார் என்பது இவருடைய இயற்பெயர். “மீன் வலையில் மாப்பட்டாற்போல்” என்ற வழக்கு மொழி இவரால் கூறப்பட்டுள்ளது (171). தன் சிறுவன் களிறெறிந்து பட்டான் என்ற உவகை ஒரு தாய்க்கு ஈன்ற ஞான்றினும் பெரிது என்றும், அவள் கண்ணீர்த் துளிகள் மூங்கிலில் வான்பெயத் தூங்கிய சிதரினும் பல என்றும் கூறியுள்ளார் (புறநா. 277). இவர் பாடியனவாக இப்பொழுது நாம் அறிபவை இந்த மூன்று செய்யுட்களே.
பூதத் தேவர்(285): நற்றிணையில் பூதன் தேவன் என்று ஒரு பெயர் காணப்படுகிறது. ஈழத்துப் பூதன் தேவன் இவரில் வேறானவர் என்று தோற்றுகிறது. விடியலில் சிறுவர் கறப்பதற்காக எருமைகளைக் கன்றுகளோடு ஓட்டிச் செல்வர் என்றும், தலைவனது நோய்க்குத் தலைவியல்லது மருந்து பிறிதில்லை என்றும் (நற். 80) இவர் கூறுவர். “வைகல் வைகல் வைகவும் வாரார், எல்லா வெல்லை யெல்லையுந் தோன்றார்” (285) என்று தலைவி கூற்றில் இவர் அமைத்திருக்கும் அடிகள் சொல் நயம் பொருந்தியனவாக உள்ளன. இவர் இயற்றியவை இந்த இரண்டு செய்யுட்களே.
பூதம் புல்லர் (190): ‘பூதம் புலவர்’ என்று பிரதி பேதம் இருத்தலால் இவர் பெயரை ‘பூதம் புலவர்’ என்றே