கொள்ளலாம். பல பசுக்கள் உள்ள தொழுவத்தில் ஒரு நல்லேறு இருக்கும் என்பது இவர் பாடலால் தெரிகிறது. பசுக்களைப் பாதுகாப்போர் பொலிகாளை ஒன்றை வைத்துக் கொள்ளல் நலம் என்ற கொள்கை இக் காலத்திலும் நிலவி வருகிறது.
பெருங்கண்ணர் (289, 310):காம நோயின் வளர்ச்சிக்கு வளர்பிறையை இவர் உவமை காட்டி உள்ளார்.பகல் கழிந்ததனால் வானம் புல்லென்று இருத்தல், தலைவன் பிரிந்ததனால் தலைவி பொலிவழிந்திருத்தல் போன்றது என்று கூறியுள்ளார். நற். 137-ஆம் செய்யுளும் இவர் பாடியது.
பெருங்குன்றூர் கிழார் (338): இவர் வேளாண் மரபினர். இவர் பதிற்றுப் பத்தின் ஒன்பதாம் பத்தைப் பாடிச் சேரமான் குடக்கோ இளஞ் சேரலிரும் பொறையிடம் முப்பத்தீராயிரம் காணம் முதலிய பரிசில் பெற்றனர். வையாவிக் கோப்பெரும் பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனுடன் சேர்த்தற்கு அவனைப் பாடி அதனையே பரிசிலாகக் கூறினர். அகப்பொருளில் குறிஞ்சித் திணையை மிகுதியாகப் பாடியுள்ளார். தலைவி பருவங்கண்டு அழிந்தமையையே புலவர்கள் பெரும்பாலும் கூற, இவர், “தலைவன் வரவை அறிந்து மின்னி இடித்து வந்த மழைக்கு விருந்து என்செய்கோ” என்று தலைவி தோழியிடம் கூறுவதாகப்(நற்.112) பாடியுள்ளார். தலைவன் பிரிவினால் தலைவி நலமழிந்து வாடுவதற்கு நீரின்மையால் வருந்தும் வேனிற்றவளையை உவமை காட்டியுள்ளார். மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கிய புலவருள் இவரும் ஒருவராவர். இவர் பாடியனவாக நாம் இப்பொழுது அறிபவை: நற். 4: பதிற். ஒன்பதாம் பத்து; அகநா. 1; புறநா. 4. பன்னிரு பாட்டியலில் இவர் பாடியனவாகச் சில சூத்திரங்கள் உள்ளன. சிறு மேதாவியார், சேந்தம் பூதனார், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரர், பரணர் முதலியோர் இவர் காலத்தவர்.
பெருஞ்சாத்தனார் (263): ஒல்லையூர் கிழார்மகன் பெருஞ்சாத்தன் என்ற உபகாரி ஒருவரைப் பற்றிய செய்தி புறநானூற்றில் (242) வருகின்றது. மகளிர் தலைவனையே தெய்வமாகக் கொள்ளும் கற்புடையர் என்பதைக் காட்ட இவர் தோழி கூற்றில் வெறியெடுத்தலை ‘வேற்றுப்பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி’ என்று கூறுகிறார். இவர் இச் செய்யுளையன்றி வேறொன்றும் பாடியதாகத் தெரியவில்லை.